Home செய்திகள் உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும்

உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும்

தியாக தீபம் திலீபனின் 6ஆம் நாள் உண்ணாநோன்பு நிகழ்வு நினைவில் அவர் தோழன் ராஜனின் பதிவுகள்…

ஐந்து நாட்கள் கடந்தும் காந்தி வழியில் சுதந்திரம் வேண்டிய நேருவின் பேரன் ராஜீவ்காந்தி அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை. ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு பெளத்தனாக இருந்து கொண்டு புத்தரின் கோட்பாடுகளின்படி நடக்கவில்லை. அன்று இவர்கள் இருவரும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தால், இந்நாட்டின் தலைவிதி வேறாக மாறியிருக்கலாம். இன்று இலங்கையில் முப்பது ஆண்டுகளில் உப்புச்சப்பற்ற வெறும் இனவாத ஆக்கிரமிப்பையே குறியாக கொண்ட ஆறு திருத்தச்சட்டங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்காது. இவ்வளவு உயிர்களும் மனித மற்றும் மூல வளங்களும் வீணாகி போயிருக்காது. இலங்கை இன்று ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக திகழ்ந்திருக்கும்.

இவர்களை விஞ்சி இன்று ஒருபடி மேலே போய் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் 2100 வருடங்கள் பின் சென்று தான் துட்டகைமுனுவின் வாரிசு என்பது போல் அநுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆனால் துட்டகைமுனுவின் செயலில் உள்ள நல்ல பக்கங்களை மறந்து அல்லது மறந்த மாதிரி நடந்து கொள்வதில் முனைப்பாக ஈடுபடுகிறார்.

இதன் ஒரு அம்சமாக தான் திலீபன் நினைவு நாளை தமிழர்கள் நடாத்தக் கூடாது என்று மனு நீதி மறந்த புது நீதி புகுத்துகிறார். துட்டகைமுனு எல்லாளனுக்கு வழங்கிய நீதியும் பிழை என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. அல்லது அவரது நீதிமன்றின் ஊடாகவே எல்லாளனுக்கு எல்லோரும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற துட்டகைமுனு வழங்கிய ஆணையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி நீக்கி விட்டோம் என அறிவித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

Thelipan உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும்திலீபன் உண்ணாவிரதம் இருந்த காலம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் சேபால ஆட்டிக்கல உத்தியோகபூர்வமாக போராட்ட அமைப்புகள் அனைத்திற்கும் பொது மன்னிப்பு வழங்கிய காலம். இந்திய அமைதிப்படையிடம் தலைவரின் அறிவுறுத்தலின் படி யோகி அண்ணா ஆயுதங்களை ஒப்படைத்த காலம். ஏன் இன்றைய மகிந்த, கோத்தபாய அரசாங்கத்தில் அமைச்சராகவிருக்கும் வாசுதேவ நாணயக்கார திலீபனை வந்து பார்வையிட்டு கலந்துரையாடல் செய்து விட்டு தலைசாய்த்து வணங்கி விட்டு சென்ற நாள் இன்றாகும். இப்படி வரலாறு இருக்கும் போது 33 வருடங்களின் பின் திலீபன் பயங்கரவாதி, நோயாளி என்று கூறுபவர்களிற்கு தான் இனவாத நோய் 70 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது.

1987இல் யாழ். சென்று திலீபனை பார்த்து வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று பாராளுமன்றத்தில் அமைச்சராக உள்ளார். திலீபன் என்னும் உன்னத போராளி உங்கள் பார்வையில் பயங்கரவாதி என்றால், அன்று திலீபனை பார்த்து வந்த அமைச்சருக்கும் இன்று ஆபத்து வந்துள்ளது. ஆகவே இவரும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவோ, நீதிமன்று முன்பாகவோ நிறுதப்படலாம். இனபேதம் இன்றி இந்த அராஜக சட்டங்களிற்கு எதிராக போராட வேண்டும் என்பதே திலீபனினை நினைவு கூர தடுக்கும் உத்தரவு சொல்லி நிற்கும் செய்தியாகும்.

ஆறாம் நாளாகிய இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் திருச்செல்வம், திருகோணமலையில் கிருபா, மட்டக்களப்பில் மதன் ஆகிய போராளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றும் திலீபன் உடல் வேதனையால் துவண்ட போதும் உறுதி தளராது விழித்து பார்ப்பதும், கதைகளை முடிந்தவரை கேட்பதும் தேவைகளுக்காக சைகை செய்வதுமாக கட்டிலில் புரண்ட வண்ணம் இருந்தார். திலீபனை பார்த்து விட்டாவது போவோம் என்று போராளிகள் வரிசையாக வந்து பார்த்து சென்றார்கள்.

திலீபனுடன் பழகிய தளபதிகள், உற்ற நண்பர்களாக கதைத்து பழகிய போராளிகள் திலீபன் காதுகளில் தங்கள் கருத்துக்களை மெதுவாக கூறினார்கள். மில்லரை வழியனுப்பி வைத்த தளபதி பிரபா வந்து திகைப்புடன் திலீபனை பார்த்தவண்ணம் அசையாது நின்றார். இருவரும் மில்லரை வழியனுப்பும் இறுதி நேரத்தில் ஒன்றாக நின்று வழியனுப்பியவர்கள். இன்று திலீபனின் நிலை கண்டு துவண்டு நின்றது உறுதியின் உறைவிடங்களுக்கு உள்ளுள்ள இளகிய மனதின் வெளிப்பாடாகவே தெரிந்தது.

உண்மையில் போராளிகள் மிக இளகிய மனம் கொண்டவர்கள், மற்றவர் துன்பத்தை தம் துன்பமாக கருதியே தம் உயிரிலும் மேலாக தம் மக்களை மதித்து தம் உயிர்களை துறக்க சித்தம் கொண்டனர். திலீபன் பெயர் வைத்து உருவாக்கிய ‘சுதந்திர பறவைகள்’ என்ற மகளீர் அமைப்பு பெண் பிள்ளைகள் திலீபனை வந்து பார்த்து கண்கலங்கி வரிசையாக சென்றார்கள். இன்று நிறைய போராளிகள் வந்து திலீபனை பார்த்து சென்றபோது கூடியிருந்த மக்கள் சோகத்தில் விம்மி அழத் தொடங்கினர். இருள் கவியும் நேரம் எல்லோர் மனங்களிலும் இனி திலீபனை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்ற உணர்வு படரத் தொடங்கியது.

 

Exit mobile version