உடுப்புக்குளம் பகுதியில் தொடரும் மணற்கொள்ளை- நடவடிக்கை எடுக்க ரவிகரன் வலியுறுத்தல்

230 Views

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரவிற்குட்பட்ட, உடுப்புக்குளம் பகுதியில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் தொடர்ச்சியாக அகழப்படுவதால் வெள்ளப்பெருக்கு மற்றும், கடல் நீர் கரையோரப்பகுதிகளுக்குள் உட்புகும் அபாய நிலை காணப்படுவதுடன், மணல் ஏற்றிச் செல்லப்படும் வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக அப்பகுதி மக்களின் நலன் கருதி குறித்த மணல் அகழ்வுச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டுமென அண்மையில் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் தொடர்ச்சியாக இந்த மணல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இந்த விடயத்தில் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை உரியவர்கள் உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“உடுப்புக்குளம் பகுதியில் மணல் அகழப்படுவது தொடர்பாக கடந்த 26.01.2021ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பேசப்பட்டது.

கடற்கரையோரமாகவுள்ள மணல் திட்டுக்கள் இவ்வாறு அகழப்படுவதால் வெள்ளப்பெருக்கு மற்றும், கடல் நீர் கரையோரப்பகுதிகளில் உட்புகும் அபாயம் என்பன இருப்பதாகவும், அப் பகுதியிலே மணல் அகழப்பட்டு உடுப்புக்குளம் நான்காம்கட்டை மயான வீதியால் தொடர்ச்சியாக ஏற்றிச் செலலப்படுவதால் அவ்வீதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிக் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் தெரிவித்திருந்தனர்.

எனவே குறித்த மணல் அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தித் தருமாறும் அப்பகுதி மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந் நிலையிலே கிராம மக்களின் குறித்த கோரிக்கைக்கு நானும், இன்னும் அங்கே கூட்டத்தில் இருந்தவர்களும் ஆதரவளித்து, அப் பகுதியில் மணல் அகழ்வது தவறான நடவடிக்கை என அந்த பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அப்பகுதி மக்களின் நலன்கருதி குறித்த மணல் அகழ்வுச் செயற்பாட்டை தடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தி அங்கு மணல் அகழ்வதை நிறுத்தவேண்டுமென அக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் வாதிட்டு, அங்கு மணல் அகழ்வுச் செயற்பாடுகள் மேற்கொள்ளக்கூடாதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அடுத்த நாளிலிருந்து குறித்த பகுதியில் மணல் அகழ்வுச் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என அப்பகுதி மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இன்றுவரை அங்கு மணல் அகழ்வுச் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

இது தொடர்பிலே அப்பகுதி கிராமமட்ட அமைப்புகள் ஒன்றுசேர்ந்து மீண்டும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரிடம் தெரிவிந்துங்கூட இன்னும் அந்த மணல் அகழ்வுச் செயற்பாடு நிறுத்தப்படவில்லை.

எனவே தயவு செய்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற ஒழுங்குசெய்யுங்கள். அவ்வாறு ஒழுங்குசெய்வதுதான் புத்திசாலித்தனமானதும், பொருத்தமானதுமென தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களைப் பணயமாகவைத்து இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்.

குறிப்பாக உடுப்புக்குளம் பகுதியில் அந்த கடற்கரையோர மணல் திட்டுக்கள் அகழப்படுவதால் ஏற்படும் பாதிப்பு நிலைமைகளைக் கருத்தில்கொண்டு இந்த மணல் அகழ்வுச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும்

நிச்சயமாக இந்த விடயத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்“ – என்றார்.

Leave a Reply