உக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மா

857 Views

உக்ரேனில் அதிபர் தேர்தல் 2019 ஏப்ரல் 21-ம் திகதி நடந்து முடிந்தவுடன் அதை மையப்படுத்தி இரசியாவும் அமெரிக்காவும் அரறவியல் நகர்வுகளை செய்துள்ளன. அரசியல் கற்றுக் குட்டியான புதிய அதிபர் ஜெலென்ஸ்க்கியின் அரசியல் அனுபவம் நகைச்சுவை நாடகத் தொடரில் அதிபராக நடித்தது மட்டுமே. உக்ரேன் தேர்தலில் இரசியாவால் பெரும் பாதிப்புக்கள் எதையும் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு வல்லரசு நாட்டின் எல்லையில் இருக்கும் நாட்டில் நடக்கும் தேர்தலில் அந்த வல்லரசு நாட்டால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிடில் அந்த நாட்டின் வல்லரசு நிலை கேள்விக் குறியாகிவிடும்.

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் ஒருபகுதியாக இருந்த கிறிமியாவை தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து உக்ரேன் வல்லரசு நாடுகளின் போட்டிக் களமானது.

இரசியாவிற்கு உக்ரேனின் முக்கியத்துவம்

உக்ரேனும் அதன் ஒரு பகுதியான கிறிமியாவும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தன. கிறிமியா இரசியாவின் வசம் இல்லாவிடில் இரசியாவிற்கு ஒரு காத்திரமான கடற்படை இல்லை என்ற நிலை உருவாகிவிடும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கையில் இருந்தால் இரசியா ஒரு வல்லரசு இல்லை என்ற நிலை உருவாகும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உக்ரேன் தனி நாடாக உருவானபோது அதன் ஒரு பகுதியான கிறிமியாவில் இரசியக் கடற்படை இருக்க ஒத்துக் கொள்ளப்பட்டது.

இரசியாவின் மீள் விரிவாக்கம்

இரசியா தனது ஆதிக்க நிலப்பரப்பை விரிவாக்குவதற்கு சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கியது. இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா,   தேர்க்மெனிஸ்த்தான்,   தஜிகிஸ்த்தான்,   உஸ்பெக்கிஸ்த்தான், உக்ரேன்ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால்   அவை சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே   ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு  உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. தனது எல்லையில் உள்ள நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதைத் தடுக்கவே இரசியா சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தை உருவாக்கியது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ இணைவதை இரசியா கடுமையாக எதிர்த்தது.

உக்ரேனும் ஜோர்ஜியாவும்

putin உக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மாஜோர்ஜியா நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய எடுத்த முயற்ச்சிகளை இரசியா கடுமையாக எதிர்த்தது ஜோர்ஜியாவில் பிரிவினைவாதத்தை ஊக்கிவித்ததுடன் ஜோர்ஜியாமீது 2008-ம் ஆண்டு படையெடுத்து அதன் ஒரு பகுதியைத் தன்னுடன் இணைத்தும் கொண்டது. அதே போல் உக்ரேன் முயற்ச்சித்தபோது 2014-ம் ஆண்டு இரகசியப் படையெடுப்பை மேற்கொண்டு கிறிமியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதை ஆட்சேபித்து அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டன.

இரசியாவின் அதிரடி நகர்வு

உக்ரேனில் அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் விளடிமீர் ஜெலென்ஸ்க்கிக்கு இரசியாவிடமிருந்து வாழ்த்துச் செய்தி எதுவும் அனுப்பப்படவில்லை. மாறாக உக்ரேனில் இருக்கும் இரசியர்கள் இரசியக் கடவுட்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவித்தலை இரசியா முதலில் வெளியிட்டது. பின்னர் அந்த விண்ணப்பங்கள் துரித வழியில் பரிசீலிக்கப்படும் என இன்னும் ஒரு அறிவித்தலையும் இரசியா வெளிவிட்டது. இந்த அறிவிப்பு புதிய அதிபருக்கு சவால்விடும் செய்தி என அமெரிக்கா கருதுகின்றது. உடனே உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதுவர் இரசியாவின் செயல் அபத்தமானதும் திடநிலைச்சீர்குலைப்பும் (destabilisation) ஆகும் என்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இரு மாகாணங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். இவர்கள் இரசியக் கடவுட்சீட்டுக்களைப் பெற்று இரசியக் குடிமக்கள் ஆகின்றமை இரசியாவிற்கு அம்மாகாணகள் மீதான பிடியை அதிகரிக்கின்றது. அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் பிரிவினைப் போர் தீவிரமடையும் போது தனது குடிமக்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் அம்மாகாணங்களைப் பிரித்து தனிநாடாக செல்வதற்கு ஆதரவளிக்கலாம் அல்லது அவற்றை பிரித்து இரசியாவுடன் இணைக்கலாம்.

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கடவுட்சீட்டு அறிவிப்பு அபத்தமானதும் உக்ரேனில் திடநிலைச்சீர்குலைப்புமாகும் (destabilisation) என்றார் உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதுவர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா அணுவலுவில் இயங்கக் கூடிய இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பியது. அவற்றில் ஒன்றான USS Abraham Lincolnஇல் இருந்து உரையாற்றிய அமெரிக்காவின் இரசியாவிற்கான தூதுவர் அந்த இரண்டு கப்பல்களின் வலிமையும் இரசியாவிற்கு ஒரு அரசுறவியல் செய்தியை (Diplomatic message) இரசியாவிற்கு சொல்கின்றன என எக்காளமிட்டார். உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதுவர் இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களுக்கு கடவுட்சீட்டுக்கள் வழங்குவதை விபரிக்கப் பாவித்த திடநிலைச்சீர்குலைப்பு (destabilisation) என்ற அதே பதத்தை இரசியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும் பாவித்தார். அவரின் உரையில் கவனிக்கப்பட வேண்டியவை:

  1. ஒவ்வொரு விமானம் தாங்கிக் கப்பலும் ஒரு இலட்சம் தொன் பன்னாட்டு அரசுறவியல் செய்தியை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
  2. இந்த இரண்டு கப்பலின் வலிமையும் இரசியா அமெரிக்காவுடன் உண்மையான உறவை விரும்பினால் இரசியா உலகெங்கும் தனது திடநிலைச்சீர்குலைப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதை இரசியாவிற்கு உணர்த்துகின்றன.

ஒற்றுமையில்லா நேட்டோவும் நெருக்கடியை விரும்பும் புட்டீனும்

இரசியாவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் ஜேர்மனியும் அமெரிக்காவும் முரண்படுகின்றன. இதை இரசியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி உக்ரேனில் தனது பிடியை இறுக்கக் கூடாது என்பதை உணர்த்தவே USS Abraham Lincolnஇல் நின்று கொண்டு அமெரிக்கத் தூதுவர் ஹண்டர் தனது அமெரிக்காவின் நிலைப்பாட்டை முழங்கியுள்ளார். நேட்டோ உக்ரேனை மையப்படுத்தி இரசியாவுடன் ஒரு போர் புரிவதையோ அல்லது ஒரு நெருக்கடி நிலை உருவாகுவதையோ விரும்பவில்லை. விளடிமீர் புட்டீன் தலைமையிலான இரசியாவும் போரை விரும்பவில்லை ஆனால் நெருக்கடியான சூழலைப் பெரிதும் விரும்புகின்றது போல் தெரிகின்றது. அதனால்தான் அது உக்ரேனில் தனது பிடியைத் தளர்த்தாமல் மேலும் இறுக்கிக் கொண்டே போகின்றது.

தேர்தலுக்கு முன்னர் இரசியா தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டில் இல்லாமல் இருந்த புதிய அதிபர் விளடிமீர் ஜெலென்ஸ்க்கி தேர்தலின் பின்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கடவுட்சீட்டு அறிவிப்பால் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளார். ஊழல்மிகு சர்வாதிகாரிகளின் ஆட்சியில் அவலப்படும் மக்களுக்கு உக்ரேனியக் கடவுட்சீட்டு வழங்கப்படும் என்றார் ஜெலென்ஸ்க்கி. அவரது தீவிரம் உக்ரேனில் வல்லரசுப் போட்டி தீவிரமடைவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

Leave a Reply