ஈழத் தமிழர் பிரச்சினையில் ஸ்டாலின் செய்யப்போவது என்ன? – அகிலன்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள   ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர் பிரச்சினையில் சாதகமான மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துமா?  கடந்த ஒருவார காலமாக எழுப்பப்படும் பிரதான கேள்விகளில் ஒன்றாக இது இருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையும் இதுவரையில் காண முடியவில்லை.

உலகத் தமிழர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் நுணுக்கமாக அவதானித்த விடயமாக இருந்தது, தமிழகத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்தான். ஜெயலலிதாவில் தொடங்கி எடப்பாடியில் முடிவடைந்த அ.தி.மு.க. ஆட்சி பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், ஆட்சிமாற்றம் எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஒரு தசாப்தத்தின் பின்னர் தி.மு.க. மீண்டும் அரியணையில் ஏறியிருக்கின்றது. ஸ்டாலின் முதலமைச்சராப் பதவி ஏற்றுள்ளார். இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கைகள், கடிதங்கள் மூலம் ஸ்டாலினிடம் பெருமளவு எதிர்பார்ப்புக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த எதிர்பார்ப்புக்களை ஸ்டாலினால் நிறைவேற்ற முடியுமா?

ஸ்டாலின் முதலமைச்சராகி இருப்பது இதுதான் முதன் முறையாக இருந்தாலும், அரசியலுக்கு அவர் புதியவரல்ல. தி.மு.க.வின் தலைவராக அவரது தந்தையே இருந்ததால் தனது மாணவப் பருவத்திலேயே அரசியலில் செயற்படத் தொடங்கியவர் அவர். அதனைவிட, கட்சியிலும், அரசாங்கத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்தவர் அவர். நிதானமாக முன்னேறி இன்று முதலமைச்சர் பதவியை அவர் பிடித்திருக்கின்றார். அரசியலில் நிறைந்த அனுபவத்தைக் கொண்டவர். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் உறுதியான ஆட்சி ஒன்றைக் காண முடியாதிருந்த நிலையில், தேவைக்கும் அதிகமான தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றார் ஸ்டானின். அந்தப் பெரும்பான்மை அவருக்கு மிகப் பெரிய பலம்.

ஸ்டாலின் முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் நிலையில், பிரதான தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்புக்கள் என தொடர்ச்சியாக அவருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பிக் கொண்டுள்ளன. ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை – நம்பிக்கையை அவர்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்கள். ஜெயலலிதாவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வின் ஆட்சி குழப்பமானதாகவும், பலமற்றதாகவும் இருந்தமையால் அதன்மீது நம்பிக்கை வைத்து செயற்படும் நிலை ஈழத் தமிழர்களுக்கு இருக்கவில்லை. அதனால், ஈழத் தமிழ்த் தலைவர்களுக்கு ஸ்டாலினின் வருகை ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக் கீற்றைக் காட்டியிருப்பதாகவே தெரிகின்றது.

தி.மு.க. மட்டுமன்றி அ.தி.மு.க.கூட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தெரிவித்திருந்தது. முக்கியமாக நிரந்தர அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுத்தல், போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை என்பன குறித்து இரண்டு விஞ்ஞாபனங்களுமே கவனத்தைச் செலுத்தியிருந்தன. தேர்தல் விஞ்ஞாபனங்களில் இவை குறித்து தெரிவிக்கப்படுவது ஒரு சம்பிரதாயமாகி இருக்கின்றது. அதனைவிட, தனியாகக் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குச் செல்லக் கூடிய வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு உத்தியாகவும் ஈழப் பிரச்சினை குறித்து இரு கழகங்களும் விஞ்ஞாபனங்களில் முக்கிய இடத்தைக் கொடுக்கின்றன.

விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதால், உடனடியாக ஈழப் பிரச்சினையை அவர் கைகளில் எடுப்பார் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல.

உறுதியான ஆட்சி ஒன்றை அமைத்துள்ள ஸ்டாலின் முன்பாக தற்போது பிரமாண்டமான பிரச்சினைகள் குவிந்துள்ளன. அதன் முன்பாக இலங்கைப் பிரச்சினை எந்தளவுக்கு எடுபடும் என்பது முக்கியமான கேள்வி! தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல்களுக்காக வெளியிடப்படும் ஒரு ஆவணம் என்பதற்கு மேலாக, அதனை யாரும் நடைமுறைப்படுத்துவதை இட்டுச் சிந்திப்பதில்லை. அதற்கான திட்டங்கள், உபாயங்களையும் அவர்கள் வைத்திருப்பதும் இல்லை. ஸ்டாலினைப் பொறுத்தவரையில் இப்போது அதிகாரத்துக்கு வந்து விட்டார். இதற்கு மேலும் இலங்கைப் பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை அவருக்கு உடனடியாக இல்லை.

அதனைவிட, மாநில அரசுகளுக்கு சில வரையறைகளும் உள்ளன. அந்த வரையறைகளைத் தாண்டி அது செயற்படும் என்பதும் எதிர்பார்க்கக் கூடியதல்ல. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு சார்பாக அவர் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டில் அவரது ஆட்சி ஒரு முறை கலைக்கப்பட்டதையும் ஸ்டாலின் மறந்திருக்க மாட்டார். மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து செயற்படும் நிலையில்தான் இந்தப் பிரச்சினையில் ஸ்டாலினால் எதனையாவது செய்யக் கூடியதாக இருக்கும். ஆனால், தற்போது அவ்வாறான உறவு இல்லை.

இப்போது அவர் முன்பாக பூதாகரமாக உள்ள பிரச்சினை தீவிரமாகப் பரவும் கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதுதான். கொரோனா என்பது வெறுமனே ஒரு மருத்துவ – சுகாதாரப் பிரச்சினை என்பதற்கு மேலாக பாரிய பொருளாதாரப் பிரச்சினை ஒன்றையும் தமிழகத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பலர் வேலை இழந்துள்ளார்கள். தொழில் முயற்சிகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. இவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் பாரியளவில் இருக்கப் போகின்றது.

இதனைவிட, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இன்றுள்ள ஒரே வழி தடுப்பூசிதான். ஆனால், தடுப்பூசி விவகாரம் மத்திய அரசின் கீழ் வருகின்றது. பாஜக அரசுடன் திமுகவுக்குள்ள உறவு எப்படியானது என்பது அனைவருக்கும் தெரியும். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகதான் பாஜகவுடன் உறவை வைத்திருந்தது. திமுக தமது பிரச்சாரங்களில் பாஜகவை கடுமையாகத் தாக்க தயங்கவில்லை. இந்தப் பின்னணியில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஸ்டாலின் அரசு மத்திய அரசுடன் போரிட வேண்டியிருக்கும். குறிப்பாக தேவையானளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது பிரதான சவாலாக இருக்கப் போகின்றது.

இவை அனைத்தையும் பார்க்கும் போது ஸ்டாலினை வரவேற்பது – வாழ்த்துவது சரிதான். ஆனால், அவர் ஈழத் தமிழர்கள் சார்பில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். தந்தையைப் போல தனையன் இருப்பார் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. ஆனால், ஈழத் தமிழர் விடயத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு மேலாக அவர் எதனையும் பேசவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.