ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம் – வேல்முருகன்

வேல்முருகன் அவர்கள் தமிழக அரசியலையும் தாண்டி  உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர். சொல்லுக்கு முன் செயல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வேல்முருகன் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் உரிமைகளுக்கான  அனைத்து போராட்டக்களங்களையும்  தனதாக்கியவர். அரசியல் முரண்பாடுகளை கடந்து மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் அனைத்து அரசியல் சிவில் இயக்கங்களையும்   ஒருங்கிணைக்கும் ஆளுமை மிக்கவர்.  ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழகத்தின் உரிமைக்காகவும்   தீவிரமாக போராட்டங்களை  முன்னெடுத்து உலகத் தமிழர்களின் கவனத்தை பெற்றவர்.

இவர் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு பேட்டி:

கேள்வி: 2009 பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக மிகப்பெரிய அளவில் அறவழியிலான போராட்டங்களை பரந்த அளவிலே முன்னெடுத்தீர்கள். ஆனால் அண்மைக் காலமாக இதன் வீரியம் சற்று குறைவடைந் துள்ளமைக்கு என்ன காரணம்?

பதில்: நான் 2009 முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பின்னர் போராட்டக்களத்திற்கு வந்தவன் இல்லை. 1983 இல் அரசு ஏவிவிட்ட  கறுப்பு  யூலைக் கலவரத்திலே ஆயிரக்கணக்கான எமது தொப்புள் கொடி உறவுகள் உயிரையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக நின்றதும்  குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட போராளிகளின் படுகொலை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தினால் மாணவர் பருவத்திலிருந்தே நான் தமிழீழ  விடுதலையை நெஞ்சில் நிறுத்தி ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் களமாடிய விடுதலைப் புலிகளுக்கும் என்னாலான உதவிகளை எந்தவொரு விளம்பரமும் இன்றி செய்ததையும், தற்போதும் தொடர்ந்து செய்து வருவதையும் போராளிகளும் ஈழத் தமிழர்களும் நன்கு அறிவார்கள்.

நான் தமிழக வாழ்வுரிமை கட்சியை நிறுவிய பின்னர் வெறும் சம்பிரதாய போராட்டங்களையும், மேடை பேச்சுக்களையும் தவிர்த்து ஈழத் தமிழர்களின் உரிமைக்காக  பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி தமிழீழத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு பன்நாட்டு புலனாய்வு மற்றும் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட முழக்கங்களை  முன்வைத்தும் மாபெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தேன். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் தினம் உள்ளிட்ட  நினைவேந்தல் நிகழ்வுகளையும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.

நான் எனது கட்சி பணிகளுக்காகவோ போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவோ ஈழத் தமிழர்களின் பணத்திலோ, புலம்பெயர்ந்த மக்களிடத்திலோ, இங்குள்ள செல்வந்தர்களிடத்திலோ ஒரு ரூபா பணத்தை கூட  பெற்றுக்கொள்வதில்லை.கட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து  சனநாயக கடமைகளையும் எனது சொந்த பணத்திலிருந்தும் எனது கட்சிக்காரர்கள் வழங்கும் நிதியிலிருந்துமே மேற்கொண்டு வருகின்றேன்.

கட்சி ஆரம்பித்ததிலிருந்து எனது வாழ்க்கை முழுவதுமே போராட்டக்களமாக இருந்தது கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து ஈழத் தமிழர்களின் போரட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தேன். அண்மைக்காலமாக மத்திய அரசின் திட்டங்கள் பல தமிழகத்திற்கு பேராபத்துக்களை ஏற்படுத்துவதால் தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால்  தமிழீழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள்  சற்று குறைவான  தோற்றத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் அது உண்மையில்லை. எம்மை பொறுத்த மட்டில் தமிழகமும் தமிழீழமும் இரு கண்களை போன்றது. ஈழத் தமிழர்களின் உரிமைக்காக எனது குரல் இறுதிவரை ஓங்கி ஒலிக்கும்.

இங்குள்ள முன்நாள் போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை தற்போதும் செய்து வருகின்றோம். அண்மையில் தமிழகத்தை சூறையாடிய கஜா புயலில் ஈழத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது இலட்சக்கணக்கான ரூபா பணத்தில் உதவி திட்டங்களை வழங்கினோம். எமது உயிர் உள்ளவரை தமிழகத்தின் உரிமைக்காகவும் ஈழத் தமிழர்களின் விடிவிற்காகவும் நானும் எனது கட்சியினரும் போராடிக்கொண்டே இருப்போம்.

கேள்வி: பன்னாட்டுப் புலனாய்வுக்காகவும் பொது வாக்கெடுப்புக்காகவும் தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக நடக்க வேண்டியது என்ன?

பதில்: 1983 இல் நடந்த இனக்கலவரத்தை இனப்படுகொலை என குற்றஞ்சாட்டி அன்றைய  இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இறுதிப்போரில் நடந்த படுகொலைகளை  இந்திய அரசு இன்றைக்குவரை இன அழிப்பு என்றுகூட ஏற்கவில்லை. அந்த படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கறை செலுத்தவில்லை.

மாறாக இன அழிப்பு செய்த இலங்கையைப் பாதுகாத்து வருகின்றது.  இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  இலங்கையில் இறுதிப் போரில் நடந்தது இனப்படுகொலை என இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக தீர்மானத்தின்படி, இலங்கை அரசுடனான அரசியல், பொருளியல், பண்பாடு என அனைத்து உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும்.

இதில் குறிப்பாக, அரசியல் வகையில் இந்திய இலங்கை உறவு நீடிப்பதை எதிர்த்து தமிழகம் கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இருநாட்டு அரசத் தலைவர்களின் பயணங்களுக்கும் சந்திப்புகளுக்கும் எதிராக தமிழகம் போர்க்கொடி உயர்த்த வேண்டும்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியமா? அதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம். இன்று இலங்கையை சீனா ஒருபுறமும் அமெரிக்கா ஒருபுறமும் பாகிஸ்தான் ஒருபுறமும் என்று பல உலக நாடுகள் தமது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயல்கின்றன. இந்த நிலைமை தொடரும்பட்சத்தில் இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

Velmurugan 2 ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம் - வேல்முருகன்அவ்வகையில் இலங்கைக்கு அருகிலே இருக்கும் தமிழகத்திற்கும் இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படும். தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமான நாடாக விளங்கும் இந்தியா தனக்கு இப்படியான புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படும்போது இலங்கை தீவில் சரியான நட்பு சக்தியை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புறக்காரணியாக அமையும்.

இன்னொருபுறம், இந்திய-சிங்கள கூட்டணியை முறிப்பதற்கான போராட்டங்கள் எந்தளவுக்கு தமிழ்நாட்டில் தீவிரம் பெறுகின்றனவோ அந்தளவுக்கு அது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் வளர்ச்சிப் போக்கில், தமிழகத்தில் கொதிநிலை ஏற்படும் இடத்து இந்திய சிங்கள கூட்டு முறிக்கப்பட்டு இந்திய-ஈழ நட்புக்கான வெளியுறவுக்கொள்கை மாற்றம் ஏற்படும். இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அகக்காரணியாக அமையும்.

எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஈழம் தொடர்பில் தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை ஏற்கும்படி இந்திய அரசை நிர்ப்பந்தித்து போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: தங்கள் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து 38 பேர் நாடாளுமன்றம் செல்லும் நிலையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் அவர்கள் செய்ய வேண்டியதென்ன என்று கருதுகிறீர்கள்?

பதில்: ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு துணைபோன காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவும் இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க மதி.முக. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்), இந்திய ஐனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகளைத்தான் நாங்கள் தேர்தலில் ஆதரவு தந்து பரப்புரையை முன்னெடுத்தோம்.

இந்த கட்சிகளிடத்தில் நாம் ஏற்கெனவே சில வலுவான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். ஈழத்தில் நடந்தது மாபெரும் இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச ரீதியான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும் தமிழகத்திலே தஞ்சமடைந்து வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்கான இரட்டை குடியுரிமை, இங்குள்ள ஈழத்து மாணவச் செல்வங்களுக்கு மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர்கல்விகளில் பாரபட்சமின்றி சம வாய்ப்பளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இதன் அடிப்படையில் நாங்கள் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக   நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று நம்புகின்றோம். இந்த விடயத்தில் கூட்டணி கட்சிகளிடத்தில் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கேள்வி: தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு  10 ஆவது ஆண்டை நெருங்கிய வேளையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 80 வீதமானவர்கள் தமிழர்களே இறந்துள்ளனர் இது குறித்து தங்கள் கருத்து?

பதில்: இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவுத் தகவல்  இலங்கைக்கு வழங்கப்பட்டபோதிலும்  கொல்லப்படப் போவது கிறித்தவர்கள் என்பதாலும் அதிலும் தமிழர்கள் என்பதாலும் இந்த தாக்குதலை சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் அனுமதித்துள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இப்போது இந்த தாக்குதலின் பெயரால் சிங்கள இராணுவத்தின் மீது பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் பத்தாண்டு காலப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீவிர முயற்சிகளை இலங்கை அரசும் அதன் உளவுத்துறையும் முன்னெடுத்து வருகிறது  அதுமட்டுமின்றி, தமிழர்களை அழிப்பதற்காக முஸ்லிம்களை அணைத்த சிங்களப் பெளத்த பேரினவாதிகள்,  தற்போது முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்கி சிங்களப் பெளத்த மேலாண்மையை நிறுவுவதற்கு இந்த தாக்குதலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கை அரசு சிங்களப் பெளத்த பேரினவாத இன அழிப்பு அரசு என்பதை இப்போதேனும் உலகம் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் சூழ்ச்சியை உணர்ந்து தமிழர்களும் அங்குவாழும் முஸ்லீம்களும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே பௌத்த பேரினவாதிகளிடமிருந்து தற்பாதுகாத்துக்கொள்ள முடியும்.