Home செய்திகள் ஈழத் தமிழர்களுக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ வழங்குங்கள் – வ.கௌதமன்

ஈழத் தமிழர்களுக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ வழங்குங்கள் – வ.கௌதமன்

ஈழத் தமிழர்களுக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ வழங்குங்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், 

“1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலைக் கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், நம் தாய்த் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தார்கள்.

மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் முதல்வர் இனியும் காலம் தாமதிக்காமல், “இரட்டை குடியுரிமை” வழங்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக, நம் தமிழ் மண்ணில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களில், 70 ஆயிரம் பேர் அகதிகள் முகாம்களிலும், 30 ஆயிரம் பேர் அரசாங்கத்தில் பதிந்து, வெளியில் வீடு எடுத்தும் தங்கி இருக்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் எத்தனையோ பேர் அந்நாட்டின் உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் இங்கிருப்பவர்களில் ஒருவர் கூட, உயர்படிப்பு படித்தோ அல்லது படித்த படிப்பிற்கான மதிப்பில் அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ இதுவரையில் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைதான். திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகள் கூட ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க விடாமல் மறுக்கப்படுகிறது.

சிங்கள அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்கு பிறகு அவர்கள் இன்னும் கூடுதலான வலிசுமந்த வாழ்க்கையைத்தான் நம் தமிழ்நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழ்ச் சொந்தங்கள், இந்திய ஒன்றிய அரசு எங்கள், “தந்தையர் தேசம்”, தமிழ்நாடு எங்கள் “தொப்புள்கொடி” உறவுகள் வாழ்கின்ற தாய்மடி என நம்பி வந்தவர்கள். ஆனால் இன்றுவரை வாழ வழியற்று நின்று கொண்டிருக்கிறார்கள்.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது மட்டுமே, இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்வின் மீதமுள்ள காலத்தையாவது அழகானதொரு வாழ்க்கையாக வாழ காரணமாக அமையும்.

இராஜபக்சேவின் கொடூர சித்திரவதை முகாம்கள் உலகம் அறிந்ததே. ஏறக்குறைய அந்த முகாம்களுக்கு இணையானதுதான் திருச்சி சிறப்பு முகாம். யுத்தம் முடிந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் அந்த முகாம் தமிழ்நாட்டில் நிலை கொண்டிருப்பது வேதனையிலும் பெரும் வேதனை. போரில் மாண்டது போக, தஞ்சம் தேடி ஓடி வந்த தாய்த் தமிழ்நாட்டிலும் அவர்களை அடைத்து வைத்து, அவர்களின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகளோடு கூடி வாழ முடியாத ஒரு சூழலை உருவாக்கி, சிறப்பு முகாம் என சிறையில் அடைத்து வைத்திருப்பது எத்தகைய அறம்?

110 பேர் கொண்ட அந்த சிறப்பு முகாமில், 80 பேர் ஈழத் தமிழர்கள். எத்தனையோ முறை தமிழ்நாட்டு தலைவர்களோடு, நாங்களும் இதற்கு முந்தியிருந்த அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் கூட இன்னும் அந்த முகாம் மூடப்படாமல் சித்திரவதைக் கூடமாக இருக்கிறது. நீதிமன்றத்திற்கு இது வரை அழைத்துச் செல்லாமலும், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும்கூட சிலரை விடுதலை செய்யாமலும், அப்பாவி ஈழத் தமிழர்கள் அநேகம்பேர் அங்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள கொடும் குற்றவாளிகளுக்கு தமிழ்நாட்டின் மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை தந்து விட்டு, அப்பாவி ஈழத் தமிழர்களை முழுவதுமாக விடுவித்து திருச்சி சிறப்பு முகாமை இனியாவது நிரந்தரமாக இழுத்து மூடுங்கள். இந்நிலையில் கூட அங்கு சிறைபட்டுக் கிடக்கும் 80 ஈழத் தமிழர்களும் தங்களது உணவிற்கான பணத்தைச் சேமித்து, ரூ.18 ஆயிரத்தை, முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அரசு ஒதுக்கியிருக்கும் அகதிகள் முகாம்களின் வீடு என்பது பத்தடிக்கு பத்தடி மண்குடிசை ஆகும். மழைக் காலங்களில் சுவர் இடிந்தும், கூரை பறந்தும் நம் தமிழீழ உறவுகள், நம்முடைய தாய்த் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு சிமெண்டாலான “கொன்கிரீட்” தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ வழி செய்யுங்கள்.

ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தந்தும், தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தும் சித்திரவதை முகாம் என்கிற திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக இழுத்து மூடி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தும் ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் தாயுள்ளத்தோடு அழகானதொரு விளக்கேற்றி வைக்கும் படி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.”

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
03.06.2021

இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Kowthaman1 ஈழத் தமிழர்களுக்கு 'இரட்டைக் குடியுரிமை' வழங்குங்கள் - வ.கௌதமன்

https://www.ilakku.org/wp-content/uploads/2021/06/Gawthaman.pdf

 

Exit mobile version