ஈழத்தமிழர் தேசத்துக்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

891 Views

தமிழீழத்தை வென்றடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது என நா.த.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தோ-பசுபிக் பெருங்கடலின் மூலோபாய புள்ளியில் கேந்திர முக்கியத்துவம் ஒன்றாக இலங்கைத்தீவு மாறியுள்ளதோடு, தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பானது இதன் புவிசார் அரசியலில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. இதனை மையப்படுத்தியே இலங்கைத்தீவினை நோக்கி சர்வதேச சக்திகள் தமது நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் உலகத்தமிழர்களின் பங்களிப்போடு ஈழத்தமிழர்களை இந்தோ-பசுபிக் புவிசார் அரசியற் புள்ளியில் சக்திமிக்க ஒரு தரப்பாக மாற்றும் வகையிலும், அனைத்துலக தரப்புக்களின் நகர்வுகளை ஆழமாக கவனத்தில் கொண்டும், ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பாக இருக்கின்ற தமிழீழத்தை வென்றடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வகுக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் வழிகாட்டி பரிந்துரைகள், மற்றும் முரசறைப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ள வெளிவிகாரக் கொள்கைகள் ஆகியனவற்றை, சமகால நிலைமைகளோடு கவனத்திலெடுத்து, இன்னும் செழிமையான ஓர் வெளிவிவகாரக்  கொள்கையினை வகுக்கும் முயற்சியாக இது அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்திலும், புலத்திலும் உள்ள வள அறிஞர்கள், பொதுமக்கள், சமூக அரசியற் தரப்புக்கள் என பல்வேறு தரப்புக்களின் பங்களிப்பினை உள்ளடக்கியதாக வெளிவிகாரக் கொள்கையினை வகுக்கும் முயற்சிகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்தோடு, இதற்கான அறைகூவல் விரைவில் வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply