ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ – சூ.யோ.பற்றிமாகரன்

உலக வரலாற்றில், மக்கள் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு குறித்த எண்ணங்களும் பதிவுகளுமே, அந்த விடுதலைப் போராட்ட நோக்கத்திற்கு உலக ஏற்புடைமை கிடைக்கச் செய்வன என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இதனால் மக்கள் விடுதலைப் போராட்டங்கள் குறித்த உண்மைத் தகவல்களை அந்த விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்ட நாடுகள் காணாமல் போகச் செய்தல் என்னும் அரசியல் அரச தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பதும் வழமை. இதனை உலகின் இன்றைய கல்வியியல் தத்துவ ஆசிரியர் நொம்சொக்சி அவர்கள் “தேவையற்ற உண்மைகளை மறைக்கும் கலை” என்று பெயரிட்டார். இந்த மறைத்தல் கலைக்கு ஊடகங்களே பெரிதும் பயன்படுத்தப்படுவதும் வழமை. இந்த வகையில்தான் ஊடகத்தில் திரள்நிலை சக்தியான திரைப்படம் என்பது அரசியலில் அரச தந்திர முயற்சிகளிலும் முதன்மை பெறுகின்றது. திரைப்படத்திற்கு அடுத்த திரள்நிலை ஊடகமாக காணொளித் தொடர்கள் இன்று அரசியலில் பொதுக்கருத்துக் கோளங்களை உருவாக்க உதவுகின்றன.

‘The Family Man 2’ என்னும் காணொளித் தொடரும் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்னும் 21ஆம் நூற்றாண்டின் முக்கிய உலக மக்கள் போராட்டம் என்ற உண்மையை மறைத்தலுக்கான முறையில் உருவாக்கப்பட்டுள்ளமை இன்றைய சமகாலத்தில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

நேரடியாகவே தமிழீழம் எனக்கதை நடைபெறும் இடத்தையும்,  பிரபாகரன் என்ற சொல்லின் உச்சரிப்புக்கு அண்மித்த உச்சரிப்பைக் கொண்ட பாஸ்கரன் என்னும் சொல்லாட்சியால் கதையின் கதாநாயகனையும் குறிப்பதன் வழி இந்தத் காணொளித் தொடர் ஈழமக்களையும் அவர்களின் தேசியத் தலைவனையும் மையப்படுத்திய கதையாக மாற்றப்படுகிறது.

கூடவே முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளுக்கு பல வருடங்களுக்கு முன்பே தேசியத் தலைவர் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அவர் இறந்து விட்டார் எனச் செய்தியை இந்திய ஊடகம், சிங்கள ஊடகங்களின் இணைப்புடன் வெளியிட்டதும் அல்லாமல், அவருடைய இறுதி ஊர்வலம் செல்லும் பாதையென ஒன்றையும் இணைத்து உலகினை குழப்பியது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

Capture.JPG1 ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ - சூ.யோ.பற்றிமாகரன்

அதே பாணியில் இன்று பாஸ்கரன் என்னும் தலைமைக் கதாபாத்திரம் நாளிதழில் தான் இறந்த செய்தியைப் படித்து “எத்தனை முறைதான் என்னைச் சாகடிப்பார்கள்”  என்று வசனம் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சி சிங்கள – இந்திய ஊடக இணைப்பு அன்று செய்த ஊடகத் திரிபுவாதத்தின் இன்றைய முயற்சியாக இந்தத் காணொளித் தொடரை மாற்றியுள்ளது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பண்புகளில் ஒன்றாக மது அருந்தாமை உட்பட்ட ஆளுமைப் பண்புகள் இருந்தன என்பது உலகறிந்த விடயம். ஆனால் இத்திரைப்படத்தில் இலண்டனில் அதுவும் மதுக் கோப்பையுடன் அவர் மற்றொரு போராளிக்கு மது அருந்தக் கூடாது என அறிவுரை வழங்குவதாக  வடிவமைக்கப்பட்டுள்ள இக்காணொளித் தொடர், தேசியத் தலைவர் அவர்களின் தன்மானத்தையும் இனமானத்தையும் ஒரே காட்சியில் திரித்துக் காட்டும் மறைத்தல் முயற்சியாக அமைகிறது.

கூடவே தன் தம்பியைக் கொன்றதற்கான பழிவாங்கல் நடவடிக்கையாக அவருடைய ஈழமக்களுக்கான போராட்டத்தை உருமாற்றி தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தையே தன்னல நோக்கு என இக்காணொளித் தொடர் காட்சிப்படுத்தி உண்மையைக் கருத்துச் சிதைவு செய்கிறது.

அத்துடன் பாஸ்கரன் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் இணைந்து சென்னையில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுவதாக கதை வளர்க்கப்பட்டமை, இந்தியாவுக்கு எதிரான இயக்கமாக ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பை இந்திய மக்கள் மனதில் கருதவைக்கும் நோக்கினைக் கொண்டுள்ளது. இது இந்திய ஈழ மக்களின் நல்லுறவை கட்டியெழுப்புவதைத் திட்டமிட்ட வகையில் தடுக்கின்ற சதி முயற்சியாக அமைகிறது.

Capture.JPG 2 2 ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ - சூ.யோ.பற்றிமாகரன்

பெண் போராளிகள் உடைய தன்னலமற்ற தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர்கள் தேவைக்காக எதனையும் செய்யத் தயாரானவர்கள் என்கிற கருத்தியலில் படைக்கப்பட்டுள்ள சமந்தா என்னும் கதாப்பாத்திரம், எவ்வளவு தூரத்திற்கு இந்தக் காணொளித் தொடர், தங்கள் வாழ்வுக்காகப் போராடிய ஈழமக்களுக்கு எதிரான கருத்தியலை உலகில் ஆழப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில் உலக நாடுகள், உலக அமைப்புக்கள், உலக மக்கள் ஆகியோரின் “பொதுக் கருத்துக் கோளம்” ஒன்று உலகில் இன்று ஈழத் தமிழர்களின் மேலான சிறீலங்காவின்  மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றச் செயல்கள் என்பவற்று நீதி கிடைக்க வேண்டுமென  வேகமாக உருவாகி வருவதைத் திசை மாற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரசியல் சதிச் செயலாகவே இக்காணொளித் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக யுத்த காலத்தில் இணைந்து நின்று செயற்பட்ட புலனாய்வுத் துறைகள், அனைத்துலக விசாரணையொன்று தங்களின் அனைத்துலக குற்றச் செயல்களை உலகு இனங்கண்டு தங்களைக் கூட்டாகத் தண்டிக்கும் நிலைமாற்று நீதியைத் கண்டு அஞ்சி அதனைத் தாமதப்படுத்தும் தந்திரோபாயமாகவும் இந்தக் காணொளித் தொடரை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதனை வெறுமனே ஒரு பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட காணொளித் தொடராகவோ அல்லது தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட கால வரலாற்றை கவனயீனமாக கட்டமைத்த காணொளித் தொடராகவோ கருத முடியாதுள்ளது.

திட்மிட்ட முறையில் அனைத்துலகிலும் ஈழத்தமிழ் மக்களின் தன்மானத்தையும், இனமானத்தையும் மட்டுமல்ல உலகத் தமிழர்களினது மதிப்பையும், மரியாதையையும் சீரழிக்கும் சதிச்செயல் என்ற வகையில் இக்காணொளித் தொடரை அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளது என்பதே உலகத் தமிழினத்தின் ஒருமித்த முடிவு. இது தமிழர்களின் அடிப்படை மனித உரிமையான கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு ஈழத் தமிழர்கள் தங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலைகளை உலகுக்குத் தெளிவுபடுத்தும் முயற்சியினைச் சீர்குலைக்கும் தமிழினப் பகைமைகளின் கூட்டு முயற்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Capture.JPG 4 ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ - சூ.யோ.பற்றிமாகரன்

இதற்கான பலத்த எதிர்ப்பு தமிழகத்திலும், தாயகத்திலும், உலகிலும் தமிழர்களிடை வளர்ந்து வருகிறது. இதனைத் திரைப்படத்துறையின் இயக்குநரும் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றவருமான நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திரைப்பட இயக்குநர் களஞ்சியம் போன்றவர்களுடன், தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் வை.கோபாலசாமி ஆகிய பல தமிழக அரசியல்வாதிகளும், இந்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஸ் ஜவடேகருக்கு அமேசான் பிரைமில் வெளியாகத் தொடங்கியுள்ள தொடரைத் தடை செய்யுமாறு எழுதியுள்ள கடிதங்களில் காணக்கூடியதாக உள்ளது. உலகளாவிய இந்த எதிர்ப்பலையாளர்கள் அமேசான் நிறுவனம் தமிழ் மக்களின் குரலுக்குச் செவிமடுக்க மறுத்தால், அவர்களின் அனைத்துப் பொருட்களையும், சேவைகளையும் புறக்கணிக்கும் உலகத் தமிழர் செயற்பாடாக மாறும் என்ற எச்சரிப்பையும் அமேசான் நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளனர்.

உலகத் தமிழர்கள் தன்மாத்திற்கும், இனமானத்திற்கும் இத்தகைய சவால்கள் விடுக்கப்படுகையில் ஈழத் தமிழர்களுக்கான தேசிய ஊடகம் ஒன்று அனைத்துலக மட்டத்தில் இல்லாதிருப்பதன் தாக்கத்தையும் ஈழத் தமிழர்கள் உணர்கின்றனர்.

எனவே இத்தகைய முயற்சிகளில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடமாக ஈழத் தமிழர்களின் அனைத்துலகத் தேசிய ஊடகம் ஒன்றை ஈழத் தமிழர்கள் தங்கள் மதி வளத்தையும் நிதி வளத்தையும் பயன்படுத்திக் காலதாமதமின்றி நிறுவ வேண்டும். இத்தகைய தேசிய ஊடகமே, ஈழத் தமிழர்கள் துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் இழக்கப்பட்ட, தங்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் சனநாயக வழிகளில் வென்றெடுப்பதற்கான ஊடகப்போரில் முக்கிய பணிகளைச் செய்யும்.

இந்தத் தேசிய ஊடகத்தை நிறுவும் முயற்சியில், ‘இலக்கு’ இணைந்து செயற்படும் என்பதையும் இந்நேரத்தில் இலக்கின் ஊடகப்பிரிவினர் ஈழத் தமிழ் மக்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

 

Leave a Reply