ஈழத்தமிழர் அரசியலில் ஈகம் பேசும் மே மாதம் முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு-பா. அரியநேத்திரன்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மே மாதம் மறக்க முடியாத ஒரு மாதமாகும். மே மாதத்தில் தான் 1976, மே14ம் திகதி வட்டுக் கோட்டையில் தந்தை செல்வாவால் சுதந்திர தமிழீழத்திற்கான தீர்மானம் நிறைவேறி 2025ல்  49, ஆண்டுகள் கடந்துள்ளன.
அதேபோல் 1976, மே 05 ல் தமிழீழ விடு தலைப்புலிகள் இயக்கம் தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டு 2025ல் 49, வருடங்கள் கடந் துள்ளன. முள்ளிவாய்க்காலில் போர் 2009, மே, 18ல் மௌனிக்கப்பட்டு தற்போது 16, வரு டங்கள் கடந்துவிட்டன.  இந்த அனைத்து தமிழ்தேசியத்தின் ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியமான விடயங்கள் “மே” (MAY) மாதத் தில்தான் நடந்துள்ளது ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்ட வரலாறுகளை படைக்கும் எவருமே இவைகளை  மறக்கவோ மறைக்கவோ முடியாத  முக்கியமான  மாதமாக தமிழர்களின் நினைவில் மே மாதம் இடம்பிடித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது ஈழத்தேசத்தின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடல் வளம் உள்ள பிரதேசமாகும். ஈழவிடுதலைப் போரின் இறுதிக் கட்ட போர் மௌனம்  2009, மே 18ல் நிறைவுற்ற இடமாக இது பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் போரின் போது ஒன்று மறியாத மூன்று இலட்சம்  தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுளின் ஐநா சபை அறிக்கையில் நாற்பதாயிரம் (40000) பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைப் பாடாகும்.
படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் உத்தியோக பூர்வமான பட்டியல் அந்த உக்கிரமான சண்டை ஏற்பட்ட நாட்களில் எவரும் பெறாவிட்டாலும் மறைந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராசப்பு ஜோசப் ஆண்டகை முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் ஒரு இலட் சத்து நாற்பத்தி எட்டாயிரம் (148,000) அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
இவ்வாறு மூன்று விதமான தரவுகள் கூறப்பட்டாலும் தமிழினப்படுகொலையின் உச்சக் கட்டம் அரங்கேறிய இடமாக முள்ளிவாய்க்கால் மண் தமிழர்களின் இரத்தமும் சதையும் தோய்ந்துள் ளது என்பதே உண்மை.
முள்ளிவாய்க்கால் போர் மௌனம் 16, ஆண்டுகள் கடந்தும் பற்றுடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை இவ்வருடம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 18ல் உலகத்தமிழர்கள் உணர்வுடன் நினைவு கூருகிறார்கள். அதன் முன் ஏற்பாடாக கடந்த 2025, மே 12 தொடக்கம் 2025, மே18 வரையும் வடக்கு கிழக்கில் சகல மாவட் டங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பல இடங்களில் வழங்கும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருவதை காணலாம்.
கடந்த 16, வருடங்களாக இனப்படு கொலைக்கான சர்வதேச நீதி வேண்டி களத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் பல்வகையான கவன ஈர்ப்பு போராட்டங்களையும், ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்களிலும் குரல் கொடுத்த வண்ணம் இந்த 16, ஆண்டுகளும் கடந்துள் ளதே தவிர அதற்கான ஒரு நீதிப்பொறிமுறை இதுவரை கிடைக்கவில்லை.
அதேபோலவே இலங்கையிலும் கடந்த 16, ஆண்டுளில் மகிந்தராஷபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாயராஜபக்‌ஷ, ரணில்விக்கிரமசிங்க, அநுரகுமாரதிசநாயக்கா என ஐந்து ஜனாதிபதிகளின் நிறைவேற்று அதிகார ஆட்சி தொடர்ந்தது. எந்த ஒரு ஜனாதிபதியும் அல்லது ஆட்சியாளர்கள் எவரும் இனப்படு கொலைகளுக்கோ, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி விசாரணையோ, தமிழ் அரசியல் கைதிகளை பூரணமாக விடுதலை செய்யப்பட்டதோ,அரசியல் தீர்வுக்கான ஏது நிலையோ, புதிய அரசியல் யாப்பு திருத்தமோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் என கடந்த 16, வருடங்கள் முள்ளிவாய்க்கால் அவலம், போர் மௌனத்திற்குப்பின்னர் பல தலைவர்களும் கட்சிகளும் புதிதாக உருவாகியுள்ளதே தவிர எந்த ஒரு தமிழ்த்தேசிய கட்சிகளும் தேர்தல் அரசியலில் கரிசனை காட்டுவதைவிட வட கிழக்கு தாயக மக்களை ஒரு தேசமாக கட்டி ஒரே குரலில் தமிழ்மக்களுக்கான தீர்வை பெற முயற்சிக்கவில்லை. கடந்த 2025, மே 06ல் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னரும் அடுத்த மாகாணசபை தேர்தலில் எப்படி வெற்றிபெறலாம், யாரை முதலமைச்சர் வேட்பாளராக்கலாம் என் பதையே கதைக்கிறார்களே தவிர தமிழ் மக்களை எப்படி ஒரு தேசமாக கட்டி எழுப்பலாம் என்பதை சிந்திப்பதாக இல்லை.
கடந்த 16, வருடங்களில் 2010, 2015, 2020, 2024, நான்கு பொதுத்தேர்தல்களில் தமிழ்த்தேசிய கட்சிகள் ஊடாக வடகிழக்கு தமிழர்களின் குரலாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுத்தும் எந்த நன்மைகளும் இனப்பிரச்சினை தொடர்பாக நடந் தேறவில்லை மாறாக நில ஆக்கிரமிப்புகளும், பௌத்த மத அடையாளங்களை வடகிழக்கில் நிறுவும் செயல்பாடுகளுமே தொடர்ந்த வண்ணம் உள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுகள் இதுவரை 16 ஆண்டுகளாக மக்கள் நினைவு கூரும் ஒவ்வொரு ஆண்டும் உயிர் நீத்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அவர்கள் இந்த மண்ணில் எந்த நோக்கத்திற்காக உயிர் நீத்தார்களோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதையே வலியுறுத்தி இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும் என்பதையே ஈழத்திலும், உலகத்தில் பரந்துவாழும் தமிழர்களும், தமிழ்நாட்டு உறவுகளும் வலியுறுத்தி வந்துள்ளனர் ஆனால் இதுவரை எந்த நாடுகளும் அதற்கான நல் எண்ணத்தை காட்ட தவறியுள்ளது என்பதே உண்மை.
ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 76, ஆண்டுகளாக அகிம்சை ரீதியிலான போராட்டங் களையும், ஆயுத ரீதியிலான போராட்டங்களையும், மேற்கொண்டதன் பயனாக தற்போது சர்வதேசம் நோக்கி எமது போராட்டம் கூர்மை பெற்றாலும் அரசியல் தீர்வும், இனப்படுகொலைக்கான நீதியும் கிடைக்கவில்லை முள்ளிவாய்க்காலில் போர் மௌனித்தாலும் கொள்கை மௌனிக்கப் படவில்லை என்பதையே ஒவ்வோரு நினைவு களிலும் நாம் வலியுறுத்திவருகிறோம்.
இன்று 16, வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிதலைமைகள் ஒன்று சேர முடியாமல் தமிழர்களை தேசமாக கட்டி ஒரு குரலில் சர்வதேசத்தை வலியுறுத்த முடியாத நிலைமைதான் 16, வருடங்கள் கடந்து செல்கின்றன.