ஈரான் அரசியலில் பரபரப்பு: ஈரான் துணை அதிபர் திடீர் ராஜினாமா?

சமீபத்தில் ஈரானின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19-ஆம் திகதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படிமசூத் பிசிஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) கிடைத்த நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஈரானின் துணை அதிபராக ஜாவித் ஜாஃப்ரி பதவியேற்றார். ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ராணுவ தளபதிகள் மற்றும் தலைவர்கள் டெஹ்ரானுக்கு வந்திருந்தனர். நகர் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியேவும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் அவர்  கொல்லப்பட்டார். இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களது நாட்டில் வைத்து இஸ்ரேல் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்துள்ளதால் தக்க பதிலடி தரப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து லெபனான், ஈராக் மற்றும் ஈரான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஈரானின் துணை அதிபரான ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்வதாக தனது  ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.