ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்

கடந்த 03ம் திகதி (03.01.2020) அன்று ஈரானிய முதனிலைப் படைத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீ ஈராக்கில் வைத்து அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் அவர் புறப்பட்டபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

ஈரான் புரட்சிகர ராணுவ காவல்படையின் (The Islamic Revolutionary Guard Corps (IRGC) தலைவர் காசெம் சுலேமானீயுடன் மேலும் நான்கு உயர் அதிகாரிகளும் (IRGC) கொல்லப்பட்டனர்.அத்துடன் ஈராக்கிய சிறப்பு அசைவியக்க படைப் பிரிவின் (The Popular Mobilization Forces – PMF) துணைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் உள்ளிட்ட ஐந்து ஈராக்கிய படையதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றமாக மட்டுமே அமையாமல் முழு மத்திய கிழக்கிலும் பதற்றத்தை தோற்றுவிக்கும் ஒரு சம்பவமாக காணப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க கூட்டுப் படைகளின் இரு தளங்களை ஈரான் தாக்கிய சம்பவத்துடன் இந்த பிரச்சனை உலகளவிலான பதற்றமாக மாற்றம் பெற்றுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதலானது, ஆறு தசாப்தங்களுக்கு மேலானது. ஈரானில் 1953இல் அமெரிக்க CIAயின் தலையீடு இந்த மோதல்களுக்கான ஆரம்பப்புள்ளி எனலாம்.

தனியார் கம்பெனிகளால் பெருமளவில் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுவந்த ஈரானிய எண்ணெய் வளத்தை தேசியமயப்படுத்த முயன்ற பிரதமர் முகமது மொசாடக் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத் துறை சதி 1953ல் ஆடசியில் இருந்து அகற்றப்பட்டார். மக்களால் சனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதமரை அகற்றிய அமெரிக்கா தனது கைப்பொம்மையான ஷாவை நாட்டின் தலைவராக நியமித்தது.

இவரின் கொடுமையான ஆட்சிக்கு எதிராக, மததத் தலைவரான அயதுல்லா கொமெனி குரல் கொடுத்தார். 1979 ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சியில் அவர் தூக்கியெறியப்பட்டார். ஈரான் இஸ்லாமிய குடியரசாக மாறியது.இதன் பின்னான இன்றுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு மோதல் போக்கே காணப்பட்டுவந்தது.iiii ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்

அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் இஸ்ரேலுடன் இணைந்து மத்திய கிழக்கை துண்டாடி, தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்வதாக ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்துக்காகவே அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈரான் தெரிவித்து வந்தது.

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் குற்றம்சாட்டி வந்தன. ஈராக், யேர்மனி, சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் ஈரான் தனது படையினைரையும், வேறு ஆயுதக் குழுக்களையும் பயன்படுத்தி அந் நாடுகளின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் இவற்றுக்கு ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவே பொறுப்பு என்றும் அவை மேலும் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் ஈரானிய புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவர் அமெரிக்காவால் ஈராக்கில் வைத்து கொல்லப்பட்டார். இந்த படுகொலையை ஆதரித்த முதல் நாடாக இஸ்ரேல் இருந்தது. நூற்றுக்கணக்கான அமெரிக்க படையினரின் இழப்புக்கு காரணமாக இருந்த காரணத்தாலும்,அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த சுலேமானி திட்டம் தீட்டியிருந்தமையாலுமே அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் கூறினார்.

ஈராக்கின் உயர் மதத் தலைவரான ஆயத்துல்லா கொமேனிக்கு மிகவும் வேண்டப்பட்டவராகவும் அவருக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிகுந்த நபராகவும் விளங்கிய மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீயின் படுகொலை ஈரானில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் இறுதி நிகழ்வில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவை பழி வாங்க வேண்டுமென்ற குரல்கள் அங்கு ஒங்க ஒலித்தன.soleimani funeral ceremony 1800 ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்

ஒரு இறைமையுள்ள நாட்டின் படைத் தலைவரை. இன்னுமொரு இறைமையுள்ள நாட்டில் வைத்து படுகொலைசெய்தமை அனைத்துத்துலக சட்டங்களை மதிக்காது நடத்தப்பட்ட ஒரு போர்க்குற்றம் என ஈரான் குறிப்பிட்டது.

ஆயினும் அமெரிக்காவுக்கு அடங்கி நடக்கும் மேற்குலகு மற்றும் சர்வதேச அமைப்புகள் எதுவும் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.
தனது நாட்டில் வைத்து ஈரானிய படைத்தளபதியும் தமது படை அதிகாரிகளும் அமெரிக்காவால் கொல்லப்பட்டமை ஈராக் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக ஈராக்கிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க படையினர் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது அமெரிக்கா எதிர்பாராத ஒரு பலத்த அடியென்றே கூறலாம்.

இந்த தாக்குதல் தொடர்பில், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் சலசலப்புகள் காணப்பட்டன. தனக்கெதிராக பதவிநீக்க நடவடிக்கையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே இந்த தாக்குதல் அமெரிக்க அதிபரால் நடத்தப்பட்டது என அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் குறிப்பாக சனநாயக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அன்று தனக்கெதிராக பதவிநீக்க நடவடிக்கையின் போது ஈராக்கில் பில்கிளிண்டன் செய்ததை இன்று ட்ரம்ப் செய்கிறார் எனவும் அவை சுட்டிக்காட்டின.

தனது படைத்துறை தளபதி படுகொலை செய்யப்பட்டமைக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிக்கை விடுத்தபோது அவ்வாறு எதாவது நிகழ்ந்தால் ஈர்க்க்கின் கலாசார பாரம்பரிய இடங்கள் உள்ளிட்ட 52 இலக்குகளை தாக்குவோம் என ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ‘நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று (07.01.2020) ஈரானின் 22 ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள இரு அமெரிக்க கூட்டுப்படைத் தளங்களைத் தாக்கின. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 – 02:15 மணிக்கு இடையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.iranh ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்

அமெரிக்க படைத்தளங்களை தாக்கப் போவதாக, ஈரான் தமக்கு முன்கூட்டி அறிவித்ததாக ஈராக் கூறுகிறது. இத்தாக்குதல்களில் 80 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது. எனினும் அமெரிக்காவும் கூட்டுப்படைகளைச் சேர்ந்த ஏனைய நாடுகளும் தமது தரப்பில் எதுவித சேதமும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி வெளியாகியதும் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் வெளியிடப்பட்டன. நேற்றோ அமைப்பின் செயலாளர், பிரித்தானிய பிரதமர் ஆகியோர் தமது கண்டனத்தை கடுந்தொனியில் வெளியிட்டனர்.
இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தியில், ”பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ ஈரான் கோரவில்லை. ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இப்பிரச்சனையை ஈரான் இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதை கோடிட்டுக் காட்டுவதாக நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும் எதிர்வு கூறமுடியாத எதேச்சதிகார செயற்பாட்டாளராகிய அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் பின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதிலேயே  முடிவா அல்லது மோதலா என்ற விடயம் பெரிதும் தங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை

Leave a Reply