இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்களும் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13-ம் திகதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே 7-வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. கடந்த 7 நாட்களில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் 1,100 இடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. குறிப்பாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் இராணுவ தரப்பில் இஸ்ரேலை குறிவைத்து இதுவரை 400 ஏவுகணைகள் வீசப்பட்டு உள்ளன. மேலும் 1,000 ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இஸ்ரேலின் டெல் அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 7 நாட்களில் இஸ்ரேல் முழுவதும் 24பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.