இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு

இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டுமே ஈரான் இராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவர் முகமது கசேமி உள்பட 4 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர்.

சமீபத்திய நிலவரப்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் உயிரிழந்தோரில் 90% பேர் அப்பாவி பொதுமக்களாவர். அடுத்ததாக, அணு ஆயுதங்கள் பற்றி ஈரான் பேசுகிறது. ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது புவி அரசியலில் திகைக்க வைக்கும் திருப்பங்களை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் – ஈரான் மோதலினால் ஏற்பட்ட சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் குறித்த தொகுப்பு இது.

இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஈரான் அடுத்தடுத்து இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்தும் ஏவுகணைகள் பாய்ந்தன. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. ஏவுகணைகள் மோதல் சத்தமும், நெரும்பும் அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது. சிறிது நேரத்தில் டெல் அவிவ் நகரின் மீது கரும்புகை சூழ்ந்தது. டெல் அவிவ் மட்டுமல்லாது இஸ்ரேலின் ஜெருசலேம், பெட்டா டிக்வா நகரங்களையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.

அடுத்தடுத்த தாக்குதல்களால், திங்கள்கிழமை காலை இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டது.