இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் -அரசியல், புவிசார் வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு – (பகுதி 2) மு.திருநாவுக்கரசு

இத்தகைய நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழரு க்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப் படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக் கப்பட்ட இனப்படுகொலைக்கான முக்கிய அடிப்படை இந்து மாகடலின் மையத்தில் இலங்கை – இந்திய அரசுகள் சார்ந்து அமைந் திருக்கக்கூடிய புவிசார்-அரசியல் அமைவிடக் கட்டமைப்பாகும். இந்தவகையில், இலங்கை – இந்திய அரசியலினதும், கூடவே இந்து மாகட லில் தத்தமக்கான நலன்களைக் கொண்ட வெளி அரசுகளினது நிலைப்பாடுகளினாலும், அவ்வக் காலகட்ட வரலாற்றுப் பரிமாணங்களுக்கேற்ப ஈழத் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையும் பல்பரிமாணம் கொண்ட தொடர் வளர்ச்சிப் போக்கான கட்டமைப்பைப் பெறுகிறது. இத் தகைய புவிசார்-அரசியல் சூழலின் கைதிகளாய் விளங்கும் ஈழத் தமிழரே இதில் முதற்தரப் பலிக்கடாக்களாய் மாள்கின்றனர்.
புவியியல் கட்டமைப்பு (Natural Geography), அரசியல்-புவியியல் கட்டமைப்பு (Political Geography), புவிசார்-அரசியல் கட்டமைப்பு (Geopolitical structure), புவிசார்-வரலாற்றுக் கட்டமைப்பு ( Geohistorical Structure) என்பனவற்றுடன் கூடவே பொருளாதாரம், மானுடவியல், சமூகவியல், பண்பாட்டு அம்சங்களும் பின்னிப்பிணைந்து அதன் வரலாற்றுப் போக்கை நிர்ணயிக்கின்றன. எந்த ஓர் கட்டமைப்பிலும்  (  Structure ) அதற்குரிய  முறைமை  ( System ) இருக்கும்.  அந்த  கட்டமைப்பின்  அடிப்படையிலான முறைமை  அது சார்ந்தவற்றின்  வாழ்நிலையை  நிர்ணயிக்கின்றது. இந்த வகையில்  கட்டமைப்பும் முறைமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகின்றன. புவியியல்  கட்டமைப்பை  இரண்டாகப் பகுக்கலாம்.
ஒன்று இயற்கையான புவியியற்   கட்ட மைப்பு ( Natural Geography) ;  மற்றையது அரசியல் அதிகாரம் சார்ந்த புவியியல் கட்டமைப்பு ( Political Geography ).
இந்தப் புவியில் மனிதனால் வகுக்கப் படும்  ஒரு நாடு என்பதே அரசியற் புவியியல் அமைப்புதான்;  அத்துடன் கூடவே ஒரு நாட்டுக் குள் மனிதனால் அரசியல்ரீதியாக வகுக்கப்படும் அரசியல் அதிகாரம் கொண்ட  மாநில முறைமை அல்லது மாகாண முறைமை  என்பனவும் அரசியற் புவியியல்தான்; நிலப்பரப்பின் மீது ஒரு மக்கள் கூட்டத்திற்கு இருக்கக்கூடிய இனத் தனித்துவத்தையும் அரசியற் பலத்தையும் உடைக் கக்கூடிய வகையில்  பிறஇனங்கள் திட்டமிட்டுக் குடியேறுவது அல்லது அந்த நிலப்பரப்பைத் துண்டாடுவது போன்ற இனவழிப்புச் செயல்கள் கூட அரசியற் புவியியல்(Political geography) என்ற வடிவத்துள் அடங்குகின்றன.
கட்டமைப்பு(structure)  இயல்பாகவே தனக் கான முறைமையைக்(system) கொண்டிருக்கும் போதிலும்,  அந்தக் கட்டமைப்பின் அடிப்படை யோடு இணைந்து மனிதன் தனக்குச் சாதகமான முறைமை மாற்றங்களை( System change) மேற் கொள்ள முடியும். உதாரணமாக  அரிசியில் இருந்து நேரடியாக சோறு,  அல்லது  கஞ்சி சமைக்கலாம். ஆனால்  அந்த அரிசியை மாவு ஆக மாற்றிவிட்டால் அதிலிருந்து அப்பம் அல்லது கூழ் சமைக்கலாம். இங்கு அரிசியின் அடிப்படைத் தன்மை இருக்கும் . அதனை அதன் அடிப்படை தன்மையில் வைத்து, ஆனால்  முறைமை மாற்றத்திற்கு  உட்படுத்தி, விரும்பிய வேறு நல்லதைப் பெறமுடிகிறது.
ஒரு புவியியல் அமைவிடத்தை  வேறொரு இடத்திற்கு நகர்த்த முடியாது; ஏனெனில் அது இயற்கையால் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் புவியியல் கட்டமைப்பின் மீது அதற்குட்பட்டு  நல்லதாகவோ,  அன்றிக் கெட்டதாகவோ,  முறைமை மாற்றங்களைச் செய்யலாம். இந்த வகையில் இயல்பான புவியியற் கட்டமைப்பின் மீது  பலாத்காரமான அல்லது உணர்வுபூர்வமான அரசியற் பலத்தைப் பிரயோகிக்கும் போது  புவியியல் கட்டமைப்பாக(Natural Geography) இருப்பது  அரசியல்-புவியியல்(Political Geography)  கட்டமைப்பாக பரிணமிக்கின்றது.
எனவே, இக்கட்டமைப்புகளை ஒன் றோடு ஒன்று தொடர்பற்ற பூட்டப்பட்ட தனிப் பெட்டகங்களாக நோக்காமல்,  அரசியல்- புவியியல்(Political Geography),  புவி-அரசியல்(Geopolitics), மெய்யியல் (philosophy-தத்துவம்)  என்ற மூன்றையும் பின்னிப்பிணைத்துப் பார்க்க வேண்டும்.
புவிப்பரப்பில் 71 % கடல், 29% நிலம். அதிலும் 15% நிலத்திற்தான் மனிதன் வாழ முடியும். நீரின்றி ஆகாது நிலம்; நிலம் இன்றி ஆகாது மக்களும் அரசும். நிலத்தில் அரசு இருந்தாலும் கடலை ஆள்பவனே உலகை ஆள்வான் என்கிறது அரசியல் கோட்பாடு. ஆதலால், நிலத்தையும் நிலத்தைச் சூழ்ந்த கடலையும் சார்ந்த அரசியலை புறவய (Objective), பருப்பொருள் (Concrete) நோக்கு நிலையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். புவிசார்-அரசியல் கட்டமைப்பானது பெரிதும் இத்தகைய புறவய – பருப்பொருள் பரிமாணத்தைக் கொண்டது.
புவியியல் அடிப்படையில் அரசியல் உறவை கௌடில்யர் பின்வருமாறு கூறுகிறார். “உனது அண்டை நாடு உனது இயல்பான எதிரி; மறுபுறம் உனது அண்டை நாட்டின் அண்டை நாடு உனது இயல்பான கூட்டாளி”.
“Your neighbor is your natural enemy and your neighbor”s  neighbor  on the other side  your  natural ally” – Kautilya.
மேற்படி புவியியல் அமைவிடம் சார்ந்த நண்பன் – எதிரி என்ற மதிப்பீட்டுக்கப்பால் பொதுவான நண்பன் – எதிரி சார்ந்து கௌடில்யர் பின்வருமாறு கூறுவதைக் கவனிக்கலாம்.
“He who has a thousand friends has not a friend to spare, And he who has one enemy will meet him everywhere. The enemy of my enemy is my friend”
“ஆயிரம் நண்பர்கள் உள்ளவனுக்குத் தக்க தருணத்தில் ஒரு நண்பனும் இல்லாமல் இருப்பான். ஆனால், ஓர் எதிரியை மட்டும் கொண்டுள்ளவனுக்கு அந்த ஓர் எதிரி எல்லாத் தருணங்களிலும் எதிரியாக இருப்பான்.” என்று கூறும் கௌடில்யர், “என் எதிரியின் எதிரி என் நண்பன்” என்று சாதாரண நண்பனை விடவும் எதிரியின் எதிரியை மேலும் பலமான நண்பன் என்று கூறுகிறார்.
இங்கு சாதாரணமான எதிரிகளுக்கு இடையே நிரந்தரப் பகைமை இல்லாது போவதற் கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், புவியியல் அமைவிடம் நிரந்தரமானது என்பதால் புவியியல் அடிப்படையிலான எதிரி அடிப்படையில் நிரந்தரமான எதிரியாவான். ஆதலால், புவியியல் அமைவிட ரீதியான நண்பன் – எதிரி உறவானது சாதாரண நண்பன் — எதிரி உறவை விடவும் அதிகம் வலிமையானது.
தீவு அரசு, தீவு நாடு, தீவுத் தேசம் (Island nation) என்பன தரைவழி எல்லையைக் கொண்ட நாடுகளை விடத் தற்காப்பில், ஒப்பீட்டு ரீதியாகப் பலமானவை. இலங்கை ஒரு தீவாக இருப்பதுதான் அதனை ஒரு அரசாக: நாடாக இருப்பதைச் சாத்தியமாக்கி உள்ளது. ஆனால், ஒரு பெரும் கடலால் அன்றி இந்தியாவுக்கு அருகே 27 கிலோமீட்டர் (14.4 நோட்டிகல் மையில்) அகலமான ஒரு சிறிய பாக்குநீரிணையால் பிரிக்கப் படுவது இலங்கைக்குப் பெரும் சவாலாக உள்ளது.
அதாவது, தீவு என்பது வரமாகவும், ஆனால் இந்தியாவுக்கு மிக அருகே தமிழகத்
தோடு ஒட்டியவாறு இருக்கும் சிறிய பாக்கு நீரிணை என்பது அதற்கு சாபமாகவும் உள்
ளது. அதாவது, இலங்கைக்கு பாக்கு நீரிணை ஒருபுறம் வரமாகவும் மறுபுறம் சாப மாகவும் இரட்டைப் பரிமாணங்களைக் கொண்டிருப் பதானது இந்திய அரசியலையும், ஈழத் தமிழர் தலைவிதியையும் நிர்ணயிக்கும் கட்டமைக் கப்பட்ட இனப்படுகொலைக்கான அடிப்படை யாய் உள்ளது.
தொடரும்…