இலங்கை- பொதுத்தேர்தல் 2024: 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கையின்   நாடாளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காக 8,888 வேட்பாளர்கள் 22 தேர்தல் மாவட்டங்களில் களமிறங்கியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற நிலையில், அப்போதிருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை. அவருக்கு ஆதரவு வழங்கி, பெரும்பான்மையைத் தரக்கூடிய நிலையிலும் எந்தக் கட்சியும் இருக்கவில்லை.

இலங்கையில் புதிய அரசியல் சூழலை உருவாக்க புதிய நாடாளுமன்றம் அவசியம் என்றும், தான் ஜனாதிபதியானால், நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத்தை அமைப்பேன் என்றும் பிரசாரத்தின்போது  அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திர்ய்ந்தார்.

அதன்படி தான் பதவியேற்ற அடுத்த நாளே, (செப்டம்பர் 24-ம் திகதி) இலங்கை நாடாளுமன்றத்தை அவர் கலைத்து உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர் 14-ம் திகதி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரின் அறிவிப்புப் படி இன்றைய தினம் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்பதுடன், இதற்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 2,034 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை கம்பஹா மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சத்து 81ஆயிரத்து 129 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களுக்காக 1,212 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவுற்றதும் முதல் கட்டமாக தபால் மூல வாக்குகள் எண்ணப்பட உள்ளதுடன், இரவு 7.15 முதல் பிரதான வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் முதலாவது பெறுபேறை வெளியிடும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.