Tamil News
Home செய்திகள் இலங்கை ஜனாதிபதி கோத்தபயா பாகிஸ்தான் பயணம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா பாகிஸ்தான் பயணம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு செல்லவுள்ளார். இதனை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ, கடந்த 18ஆம் திகதி பதவியேற்றிருந்தார். புதிய ஜனாதிபதியை இன்று(20) தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு விரைவில் வருகை தரவேண்டும் என்று கோத்தபயா ராஜபக்ஸவிற்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கான் அழைப்பை ஏற்றுகொண்ட கோத்தபயா ராஜபக்ஸ, பாகிஸ்தான் வர சம்மதித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு இம்ரான் கான் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, விரைவில் பாகிஸ்தானுக்கு வருகைதர வேண்டும். அதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் எனத் தெரிவித்தார். அதற்கு இலங்கை அதிபரும் இம்ரான் கான் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கு இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ செல்லும் திகதிகள் குறித்து இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்தியப் பிரதமர் மோடி, கோத்தபயாவிற்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை இலங்கைக்கு அனுப்பி கோத்தபயா ராஜபக்ஸவை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி அனுப்பியிருந்தார்.

அத்துடன் கோத்தபயா ராஜபக்ஸவை இந்தியாவிற்கு வருகை தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, எதிர்வரும் 29ஆம் திகதி இரு நாட்கள் பயணமாக கோத்தபயா ராஜபக்ஸ இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version