இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 84 பேர் படுகாயம்

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று(13) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(13) வரையில் பொல்தூவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இளைஞர்களை கலைப்பதற்காக  காவல்துறையினர் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, பிரதமரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி நேற்று(13) கொழும்பு – ஃபிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இதன்போது ஏற்பட்ட மோதலில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியன தொடர்ந்தும் பொதுமக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியே கடந்த 9 ஆம் திகதி குறித்த வளாகங்களை மக்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.