Home உலகச் செய்திகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

583 Views

இலங்கையின் கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்த 54 இந்திய  மீனவர்களில்  40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தமது படகுகள் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை விசேட சுற்றிவளைப்புக்களின் போது, இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களின் ஐந்து படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பான கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக கரிசனை காட்டப்பட்டதுடன் அவர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது தொடர்பாகவும் உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நல்லிணக்க அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் எந்தவித வழக்கும் தொடராமல் படகுடன் விடுதலை செய்து தாயகம் திருப்பி அனுப்புமாறு சட்டமா அதிபருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதன் அடிப்படையில், குறித்த மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படை மீனவர்களை அவர்களின் படகுகளுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காததை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் வகையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டதாக தமிழ்நாடு மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும், தமிழ்நாட்டு மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் நிராகரித்திருந்தனர்.

எனினும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டே தினங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை, தற்போது பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி, இந்த தேர்தலில் தமக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் விடுதலை செய்துக்கொண்டுள்ளதாக தற்போது பேசப்பட்டு வருகின்றது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version