‘இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டனர்’ – கோட்டாபய ராஜபக்ஷ

308 Views

இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.

கொழும்பில் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் உடனான சந்திப்பின்போது கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் பாதுகாப்பு படைகளின் வசம் உள்ளதாக அவர்களது உறவினர்கள் நம்புகின்றனர். ஆனால், அதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

இலங்கை அரசு கூறுவது என்ன?
காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்று ஹானா சிங்கர் உடனான சந்திப்பு குறித்து ஜனவரி 18 அன்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முடிவில்லாத துயரக் கதை
இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்?
“காணாமல் போனவர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கான தமது திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ விவரித்தார். அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை விவரித்தார்,” என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

“இதை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்று அவர்களின் குடும்பங்களுக்கு தெரியவில்லை என்பதால், அவர்கள் காணாமல் போனதாகக் கூறுகின்றனர்,” என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமைHTTP://WWW.PMDNEWS.LK

இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் (நடுவில்) உடன் கோட்டாபய ராஜபக்ஷ.
இலங்கை சட்டத்தின்படி இறப்புச் சான்றிதழ் இல்லாமல், காணாமல் போனவர்கள் விட்டுச்சென்ற சொத்துகள், வங்கிக் கணக்கில் உள்ள பணம், பரம்பரை சொத்துகள் ஆகியவற்றை அவர்களது குடும்பத்தினரால் அடைய முடியாது.

உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் இலங்கையில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன. இது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்றும், போர்க் குற்றச்சாட்டுகளை உள்நாட்டிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

காணாமல் போனது எப்படி?
இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போர் மே 2009இல் முடிவுக்கு வந்தது.

பெரும்பான்மை பௌத்த – சிங்கள நாடக உள்ள இலங்கையில் இருந்து பிரிந்து தனித் தமிழீழம் அமைய வேண்டும் என்று விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தினர்.

உள்நாட்டுப் போரில் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்தனர் மற்றும் சுமார் 20 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.

அப்போது இலங்கைஒடுக்கிய பாதுகாப்பு செயலராக இருந்து கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களால் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கியவராக பார்க்கப்படுகிறார். ஆனால், தமிழர்கள் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை. இது சமீபத்திய ஜனாதிபதி தேர்தலிலும் எதிரொலித்தது.

போர் முடிந்த சமயத்தில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக இருந்தார்.
இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா குற்றம் சாட்டியது.

சரணடைய முற்பட்ட தமிழர்கள் அல்லது கைது செய்யப்பட்ட தமிழர்கள் இலங்கை பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு காணொளி ஆதாரங்கள் உள்ளபோதிலும், தங்கள் மீதான குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இலங்கை ஜனாதிபதியாக இருந்த, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாயவிற்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்ட செயல்பாட்டாளர்கள், தொழில் அதிபர்கள், ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் போர் முடிந்த பின்னரும் தொடர்ந்தன. அவர்கள் இப்போதுவரை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ராஜபக்ஷ சகோதரர்களின் தரப்பு மறுத்து வருகிறது.

நன்றி BBC tamil

Leave a Reply