இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டுக் குழுவொன்றை அமைக்க கோரிக்கை

06. ‘மீனவர் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து தீர்வுகாண வேண்டும்’ என்று இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
‘தமிழக, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதுடன், தாக்குதலுக்கும் இலக்காகின்றனர்’ என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

‘தமிழக, மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன’.
‘அண்மையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை’ என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரியுடனும் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இதன் பின்னரே மத்திய அரசாங்கம் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தது’ என்று இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தலைமன்னாருக்கு தெற்காகவுள்ள கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஒரு வார காலப்பகுதியினுள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மொத்தமாக 57 இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.