Tamil News
Home செய்திகள் இலங்கை அரசிடமிருந்தே தமிழ் மொழி புறக்கணிப்பை சீனர்கள் கற்றுள்ளனர் – மனோ கணேசன்

இலங்கை அரசிடமிருந்தே தமிழ் மொழி புறக்கணிப்பை சீனர்கள் கற்றுள்ளனர் – மனோ கணேசன்

“தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர்ப் பலகைப் படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது எனச் சீன தூதரகம் எனக்குத் தெரிவித்துள்ளது. எனினும், இதுபற்றி யோசித்துப் பார்த்தால், தமிழ் மொழியைப் புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகின்றது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பைக் கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழிச் சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கின்றார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், நடந்த சட்டமா குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீனத் தூதரகமா? இலங்கை அரசா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை – சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழிப் போராட்டத்தைக் கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

தமிழ் மொழியைத் தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர்ப் பலகைகளும் இந்த நாட்டில் உள்ளன.

நான் சீனச் தூதுவரை சந்தித்து இது பற்றி விளக்கிக் கூறியுள்ளேன். சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும், அதேபோல் சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில், பண்டைய வரலாற்று காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளைப் பற்றி அப்போது சீனத் தூதுவர் என்னிடம் மிகவும் சிலாகித்துக் கூறினார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதமே நான் சீனச் தூதரகத்துக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்கப் போகும் சீன நிறுவனங்கள் இதுபற்றி மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறினேன்.

சீனத் தூதரகத்தில் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்குப் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்.

தற்போது சமூக ஊடகங்களில் உலாவரும் ஒரு தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் கொண்ட பெயர்ப் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டது எனச் சீனத் தூதரகம் எனக்கு அறிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் கிடையாது. இது கவலைக்குரியது. இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக எமது மொழியுரிமை குறித்து, நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.

இன்று யோசித்துப் பார்த்தால், இலங்கை வரும் சீன நிறுவனங்கள், தமிழைப் புறக்கணிக்க, நமது இலங்கை அரசிடம்தான் கற்றுகொள்கின்றனர் போல் தெரிகின்றது. அந்தளவுக்கு உள்ளூர் நிலைமை மோசம்.

கடந்த அரசில், அரச கரும மொழித்துறையும் எனது நேரடிப் பொறுப்பில் இருந்தபோது, எனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு மிக அதிகமான பணியை நான் ஆற்றினேன். நாட்டில் எங்காவது பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாமலோ, பிழையாகவோ இருந்தால், எவரும் என்னை நேரடியாக எனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தேன்.

நாட்டில் மொழித்துறைக்குப் பொறுப்பாக ஒரு அமைச்சர் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலைமை நிலவியது. இது அனைத்து தமிழ் மொழி எழுதி, பேசி வரும் அனைவரது மனசாட்சியும் அறிந்த உண்மை.

பேராசிரியர் சந்திரசேகரனை அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக நியமித்து, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். புகார்களை உள்வாங்கி திருத்தி அமைக்கும் நிலையம் ஒன்றை, அமைச்சில் அமைத்தேன்.

அதேபோல், அரச நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வசதி இல்லாவிட்டால் எனது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தேன். கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து மொழி சட்ட அமுலாக்கலைப் படிபடியாக மேம்படுத்தினேன்.

இப்போது அந்த பெயரில் அமைச்சே கிடையாது. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் ஆகியவை எந்த அமைச்சின் கீழ் உள்ளன என்றே பாமர மக்களுக்கு தெரியவில்லை. இந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது.

இதுதான் இன்றைய அரசின் நிலைமை. இது இன்று இந்த அரசில் இருக்கின்ற தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோருக்குத்தான் வெளிச்சம். இந்த அரச எம்.பிக்களுக்கே, இன்று இந்த மொழித்துறை அமைச்சர் யார் எனத் தெரியுமோ என எனக்குப் பெரும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். அந்தப் போராட்டத்தையும், இலங்கை, சீனம் ஆகிய இரண்டு நாட்டு அரசுகளுக்கும் எதிராகவே செய்ய வேண்டி வரும். இந்நாட்டு அரசமைப்பில் உள்ள அரச கரும மொழி சட்டத்தை மீறும் பெயர்ப் பலகைகளில் கறுப்பு வண்ணத் தாரைப் பூசும் போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்த வேண்டி வரும்” – என்றுள்ளது

Exit mobile version