1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் பிரித்தானியர் கைப்பற்றிய போதிலும் அதனை இந்தியாவுடன் இணைக் காது 1802 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து பரிபாலித்தனர். 1802 ஆம் ஆண்டு பிரான்சுடன் கையெழுத்தான ஏமியன்ஸ் உடன் படிக்கையைத் (The Treat of Amiens) தொடர்ந்து இலங்கையைப் பிரித்தானியா தனது முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியது.
இலங்கையை இந்தியாவுடன் இணைக் காது ஒரு தனித் தீவு நாடாகப் பேணவேண்டும் என்பது பிரித்தானியாவின் பிரதான கடல்சார் கொள்கையாகும். அதற்கு ஏற்ப கூடவே இலங் கையை ஓர் ஒற்றையாட்சி நாடாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாய் இருந்தனர். 1802 ஆம் ஆண்டிலேயே ஒற்றை ஆட்சிக்குரிய அரசியல் நிர்வாகக் கட்டமைப்புகளை வகுத்துக்கொண்டனர். 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய போது கண்டிப் பிரதானிகளின் வற்புறுத்தலுக்கு அமைய எழுதப்பட்ட கண்டி உடன்படிக்கையில் சிங்கள பௌத்தம் அவர்களது பிரதேச சுயாதிபத்தியம் என்பவற்றை மதிப்பதாகப் பிரித்தானியர்கள் கூறியபோதிலும், 1818 ஆம் ஆண்டுக் கண்டிக் கலகத்தின் பின்பு அதனைக் கைநழுவவிட்டனர்.
1833 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்ட கோல்புறூக் – கேமரன் (Colebrooke — Cameron) அரசியல் யாப்பு ஏற்பாட்டின் கீழ் கொழும்பை மையமாகக் கொண்ட தெளிவான ஒற்றையாட்சி நாடாக முழு இலங்கையும் ஒரு கோட்டின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
முழு இலங்கைத் தீவும் ஒரு குடையின் கீழ் ஆளப்பட வேண்டும் என்கின்ற கொள்கை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு ஆட்சியாளர்களிடமும் இருந்தாலும், அது நடைமுறையில் 1815 ஆம் ஆண்டு பிரித்தானியரால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்படும் வரை ஆள்புல அர்த்தத்தில் இருக்கவில்லை.1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 1818, 1833 என்ற இரு படி முறைகளைத் தாண்டி ஒரு குடையின் கீழ், அதாவது கோல்புறூக் கேமரன் அரசியல் யாப்போடு முழு அளவில், முழு இலங்கையும் கொழும்பை மையமாகக் கொண்ட ஒற்றை ஆட்சி முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பரந்த இந்துமாகடல் நலனோடும் இந்தியாவை ஆள்வதற்கான இராணுவ முகா மாக இலங்கைத் தீவைக் கையாள்வதற்கான நோக்கத்தோடும் ஒற்றை ஆட்சிமுறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கையையே அனைத்துக் கடல்சார் பேரரசுகளும் விரும்பின. ஐரோப்பியப் பேரரசுகளான போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், மேலும் அமெரிக்கர், சீனர், இந்தியர் எனப் பல பேரரசுகளும் விரும்பிய அதேவேளை நவீன வரலாற்று ஈழத் தமிழருக்குத் தலைமை தாங்கிய பல தமிழ்த் தலைமைகளும் ஒற்றை ஆட்சி முறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கை அரசையே விரும்பின.
பிரித்தானிய-இலங்கையில் பிரித்தானிய அரசின் சேவகர்களாக உருவான ஈழத்தமிழர் தலைமைகள்.
நவீன இலங்கையில் ஈழத் தமிழருக்கான முதலாவது தலைமை இராமநாதன் குடும்பத்துடன் ஆரம்பமாகி 100 ஆண்டுகள் நீடித்தன. 1833 ஆம் ஆண்டு ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஈழத் தமிழருக்கான முதலாவது தலைவராகச் சட்ட நிரூபண சபைக்கான உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராய் பிரித்தானிய ஆட்சியால் நியமிக்
கப்பட்டார். அதைத்தொடர்ந்து முத்துக்குமார சாமியின் வம்ச வழி வந்தவரான சேர்(sir). பொன் இராமநாதன் அப்பதவியில் தொடர்ந்தார். 1930 ஆம் ஆண்டு ராமநாதன் காலமாகும் வரை சுமாராக ஒரு நூற்றாண்டு காலமாய் இராமநாதன் வம்சம் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கியது.
பிரித்தானிய எஜமான்களின் விசுவாசம் மிக்க அடிமைச் சேவகங்களாய் விசுவாசம் மிக்க அடிமைச் சேவகனுக்குக் குத்தக்கூடிய ‘Sir’ என்ற அடிமை முத்திரையை நெற்றியில் குத்தியவாறு இந்த வம்சம் தமிழ் மக்களுக்குத் தலைவனாகியது. இந்தியாவில் ‘Sir’ பட்டம் அடிமை முத்திரையாகக் கடும் விமர்சனத்திற்கும் பலரால் நிராகரிக்கப்பட்டும் வந்த காலகட்டத்தில் இராமநாதன் வம்சம் பெருமையாக இந்த அடிமை முத்திரையைத் தலைமேல் ஏற்றிக்கொண்டது.
இலங்கையில் ஆள்பதிகளாக இருந்த பிரவுன்ரிக் (Brownrigg) என்பவரின் அந்தரங்கச் செயலாளராய் (Personal Officer) பதவி வகித்த குமாரசுவாமிப்பிள்ளை அவரைத் தொடர்ந்து ஆள்பதிகளான பக்கெட் (Paget), பான்ஸ் (Barnes) என்போருக்கும் மேற்படி விசுவாசம் மிக்க அதிகாரியாய்ப் பணியாற்றினார். குறிப்பாக, பிரித்தானியரால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்ட காலத்தில் (1815) ஆள்பதி பிரவுன்ரிக்கு பெரிதும் உறுதுணையாக நின்றவுடன் பிரவுன்ரிக் குக்கும் கண்டி இராச்சியப் பிரதானிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பாத்திரம் வகித்தார். தகைய எஜமானிய விசுவாசமிக்க வகையில் மூன்று ஆள்பதிகளுக்குக் கீழ்ச் சேவகராகப் பணியாற்றியதின் பின்னணியில், ஈழத் தமிழரையும் இலங்கைத் தீவையும் பிரித்தானியரிடம் விற்றுப் பிழைப்பதற்கான பரிசாய் ஈழத் தமிழரின் தலைவராகப் பிரித்தானிய எஜமானால் குமாரசுவாமி நியமிக்கப்பட்டார் என்ற வரலாற்று நடைமுறை உண்மை பெரிதும் கவனத்துக்குரியது.
இந்தவகையில், பிரித்தானியர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இலங்கை, ஒற்றை ஆட்சி முறை என்பனவற்றைத் தோளில் சுமந்தவராய் குமார சுவாமிப்பிள்ளையும் கூடவே அவரின் வழிவந்த இராமநாதன் வம்சமும் நவீன வரலாற்றில் ஒரு நூற்றாண்டைக் காவிச் சென்றனர். இராமநாதன் வம்சம் ஒருபுறம், பிரித்தானிய எஜமான்களின் அப்பட்டமான சேவகர்களையும் அதேவேளை கூடவே சிங்கள பௌத்த கனவான்களின் தோழர்களையும் தமிழ் மக்களின் பெயரால் அரசியல் அதிகாரம் பெற்றுக் களவாடினர். இராமநாதன் வம்சம் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றியவர்கள் என்று ஒரு பகுதியினர் குறிப்பிடுகின்றனர் ஆயினும், பசுவில் பால் கறக்க மாட்டுக்குப் புல்லு போடுவது போன்றதே அது.
இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை என்ற அரசியல் கட்ட மைப்புக்கு ஊடாகவே நவீன வரலாற்றில் பிரித் தானியரால் அவர்களது கடல்சார் காலனிய ஆதிக்க நலன்களின் பொருட்டுக் கட்டமைப்புச் செய்யப்பட்டது. அத்தகைய கட்டமைப்பை உரு
வாக்குவதில் ஈழத் தமிழரின் பெயரால் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் பெரும் பணியாற்றி யவர்கள் இராமநாதன் வம்சத்தினர் என்பதையே வரலாற்றன்னை கண்ணீரும் செந்நீரும் சொரியப் பதிந்து வைத்துள்ளாள்.
பிரித்தானிய அரசு சிங்களர் பெரும்பான் மைக்கு சாதகமாக டொனமூர் யாப்பை கொண்டு வந்த போது, தான் விசுவாசமாய் நம்பி இருந்த தனது வெள்ளை எஜமான்கள் தன்னைக் கைவிட்டதையும், தான் தோள்கொடுத்த சிங்களக் கனவான்கள் கால்களால் உதைத்துவிட்டதையும் எண்ணி நொந்து கொண்ட சேர் பொன். இராமநாதன் தமது வம்சத்தின் அரசியல் தோல்வியைத் தனது அந்திமக்காலத்தில் பின்வருமாறு குற்ற ஒப்புதல் வாக்குமூலமாய் பதிவு செய்தார்.
‘Donoughmore means Tamils no more’. டொனமோர் வந்தால் தமிழர்கள் இனி இல்லை என்று வருத்தத்தோடு பதிவு செய்தார்.1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய ‘தந்தை செல்வா’ என்ற மகுடம் தாங்கிய திரு. எஸ்.ஜே. வி. செல்வநாயகம் தனது அந்திமக்காலமான 1976 ஆம் ஆண்டு பின்வருமாறு அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தோடு மேற்படி இராமநாதனின் வாக்குமூலம் ஒப்பிடப்படக்கூடியது.
‘இனி தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ தமது ஆயுட்கால அரசியற் தலைமைத்துவத் தோல்வியைக் கடவுளை முன்னிறுத்தி, கூடவே கடவுளின் தோள்களில் சுமத்திவிடும் ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலமே இதுவாகும்.
இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு இராமநாதனே வழிகாட்டியாய் அமைந்தார். பிற்காலத்தில் தமது பாரிய அரசியல் தோல்வி களுக்கெல்லாம் ஒப்புதல் வாக்குமூலபாய் ‘சிங் களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்’ என்று திருவாளர்கள் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் இதுவரை கூறி உள்ளமையும் மேற்படி கூறப்பட்ட அடிப்படையை ஒத்ததே. தமது இயலாமைகளையும் தோல்விகளையும் தவறுகளையும் குற்றங்களையும் பழியாக எதிரி களின் தலைகளில் போட்டு அல்லது கடவுளின் தோள்களில் சுமத்தித் தம்மை அப்பாவிகளாக உருவகித்துத் தம்மை விடுதலை செய்துவிடுவது தமிழ்த் தலைவர்களுக்குக் கைவந்த கலையாகும்.
கால் கல்லுடன் மோதிவிட்டது என்ற தன்பக்க உண்மைக்குப் புறம்பாக ‘காலில் கல்லடித்து விட்டது’ என்று கல்லில் மட்டும் பழிபோடுவது போல பொதுவாக தமிழ்த் தலைவர்கள் தமது பிழை, குற்றம், குறை, தவறு, தோல்வி, வீழ்ச்சி என்பனவற்றைப் பிறர்மீது மட்டுமே ஏற்றித் தமக்குத் தாமே வெள்ளை அடித்துத் தப்பித்துக்கொள்வார்கள். இதுவிடயத்தில் அப்பாவிக் கடவுளையும் முன்னிறுத்திக் குற்றத் தில் கடவுளுக்கும் பங்களித்துத் தம்மைத் தற்காத்துக்கொள்வார்கள்.
தோல்விக்குப் பொறுப்பேற்காத தகைய வரலாற்று வளர்ச்சிப்போக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குச் சேவகம் செய்யவல்ல ஒன்றாகவே அமைந்தது. ஆதலால், தோல்விக்குப் பொறுப்பேற்காத தமிழ்த் தலைவர் களின் அரசியல் கலாசாரமும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அம்சம் என்ற பரி மாணத்தையே பெறுகிறது.
இராமநாதன் வம்சம் தமிழ் மக்களின் பெயரால் அரசியல் அதிகாரத்தைப் பெற்று, அவர்கள் நமது வெள்ளை எஜமான்களுக்கும் சிங்களக் கனவான்களுக்கும் செய்த சேவகம்தான் பெரிது என்று வரலாறு சொல்கிறது.
வரலாறு என்பது கிரேக்க மூலச் சொல்லான ‘Historia’ என்பதில் இருந்து Histories, History என உருவானது. வரலாறு என்றால் ஒரு கதை அல்ல, நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் செல்லும் ஒரு தொகுப்புமல்ல. அது நடைமுறை பற்றிய ஒரு விசாரணையின் பாலான தீர்ப்பு.
‘Historia’ என்ற கிரேக்க மூலச் சொல்லின் பொருள் ‘inquiry’ – விசாரணை. இதன் வரைவிலக்கணம் பின்வருமாறு சொல்லப் படுகிறது: ‘The Greek word historia originally meant inquiry, the act of seeking knowledge, as well as the knowledge that results from inquiry.’
‘Historia’ என்ற கிரேக்க மூலப்பதத்தின் பொருள் விசாரணை என்பது. அதாவது அறிவைத் தேடும் செயல், அத்துடன் விசாரணையின் பெறு பேறாய்ப் பெறப்படும் அறிவு.’
நவீன வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுவரை யான இராமநாதன் வம்சத்தின் சுமாராக நூற்றாண்டு கால அரசியல் தலைமைத்துவத்தையும், அதன் பின்னான இற்றைவரையான சுமாராக நூற்றாண்டு காலத் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தையும் காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்புகளைக் கடந்து முற்றிலும் அறிவார்ந்த வகையில் விஞ்ஞானபூர்வமான வரலாற்றாய்வுக்கூடாக எடை போடு
வதன் மூலமே கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலையின் முழுமையான பரிமா ணத்தையும் கற்றுணர்ந்து ஈழத் தமிழரின் எதிர் காலத்திற்கான பாதையையும் பயணத்தையும் வகுக்க முடியும்.