இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள் – (பகுதி 3 பாகம் 6) மு.திருநாவுக்கரசு

உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கு விதிவிலக்கானது அல்ல. கி.மு நான்காம் நூற்றாண்டில் முதலாவதாக இந்தியாவில் எழுந்த மௌரியப் பேரரசு அண்டை நாடுகளை நோக்கிப் பரந்து விரிவடையத் தொடங்கியது. மௌரியப் பேரரசு அசோகச் சக்கரவர்த்தியின் தலைமையில் பேரரச தத்துவமாய் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த மதத்தைக் கையில் எடுத்து அதன் வழி பௌத்த மத வடிவில் பேரரசர் ஆதிக்கம் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குப் பரவியது.
அதேவேளை, பேரரசுகளின் எழுச்சியையும் வளர்ச்சியையும் தாண்டி பேரரசுகளை அண்டிய பகுதிகளில் தப்பிப் பிழைத்து வாழும் சிறிய அரசுகளும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தவகையில், அரசுகளின் அல்லது பேரரசுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் கோட்பாடு கி.பி 1648 ஆம் ஆண்டு வடிவம் பெற்ற வெஸ்பாலிய உடன்படிக்கை (The Treaty of Westphalia) – அரசுகள் ஒன்றை ஒன்று அனுசரித்து சமா தானபூர்வமாக வாழ வேண்டும் என்றும் ஓர் அரசை இன்னொரு அரசு ஆக்கிரமிக்கக்கூடாது என்றும் சர்வதேச பரிமாணம் மிக்க உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்றில் இது அப்படியே நடை முறைப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு இல்லை ஆயினும், பெரிய அரசுகளை அண்டி சிறிய அரசுகள் வாழும் வரலாற்று நடைமுறையும் உண்டு. இது பெரிய – சிறிய அரசுகளுக்கு இடையே உறவுகளைக் கையாளும் அரசியல் கலையில் தங்கி உள்ளது என்பதும் கண்கூடு. இப்பிரச்சினையைக் கட்டுரையின் இறுதியில் ஆராயலாம்.
மகாவம்ச மனப்பாங்குகி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பரவிய அசோகப் பேரரசு  தேரவாத (Theravada) மகா சங்கத்தையும் தேரவாத பௌத்த அரசையும் இலங்கையில் ஸ்தாபித்தது. எப்படியோ அசோகப் பேரரசினது பேரரச ஆதிக்கத்திற்கு இலங்கை பணிந்தது.
அரசும் மதமும் பேரரச ஆதிக்கத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வரலாற்றாளர்கள் கூறுவது சரி.கி.மு 2 ஆம் நூற்றாண்டு அளவில் (கி.மு 150 – 100) இந்தியாவில் இன்னொரு பௌத்த பிரிவாக மகாயான பௌத்தம் (Mahayana Buddhism) எழுந்தது. அது தென்னிந்தியாவில் வலுவடைந்து, கி.பி 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னன் மகாசேனன் (Mahasena 277 – 304 AD) காலத்தில் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த துறவியான சங்கமித்தர் (Sangamittar) தலைமையில் இலங்கைக்குள் நுழைந்தது. அம்மதப் பிரிவு மன்னன் மகாசேனனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரச மதமாய் உருப்பெறத் தொடங்கியது. அக்காலத்தில் இலங்கையில் தேரவாத பௌத்தம் தடை செய்யப்பட்டு அதன் மகாவிகாரையும் மகா சங்கத்தினரும் தாக்கப் பட்டனர்.
இதனால் தேரவாத பௌத்த பிரிவுக்கும் மகாயான பௌத்த பிரிவுக்கும் இடையே வன் முறை, வாளேந்திய போர்முனை உருவான சூழ லில் இறுதியாக மன்னன் மகாசேனன் மீண்டும் தேரவாத பௌத்தத்துக்கு மாறியதும் மகாயான தலைமை மதகுருவான சங்கமித்தர் படுகொலை செய்யப்படுவதுடன் இத்தகைய மதப்பூசல் முடிவுக்கு வந்தது. இங்கு பௌத்தம் – அரசு – அரசியற்கொலை (Assassination), அதுவும் ஒரு தலைமை பௌத்த துறவி அரசியற்கொலை செய்யப்பட்டமை என்பன ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு வரலாற்றுத் திரட்சியைக் காணலாம்.
கி.பி 433 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலிருந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அறுவர் அநுராதபுர இராட்சியத்தைக் கைப்பற்றி 26 ஆண்டுகள் ஆண்டனர். இக்காலத்தில் பாண்டி யர்களால் தேடப்பட்டுவந்த தாதுசேனனை (Dhathusena) பௌத்த மகா விகாரையின் தலைமை மதகுருவும் தாதுசேனனின் மாமனும் ஆகிய மகாநாம தேரர் (Mahanama Thero), தனது மருமகனா கிய தாதுசேனனை பௌத்த துறவியாக மாறு வேடமிட்டுப் பாதுகாத்து வந்தார். இறுதியாக பாண்டியர் ஆட்சியை தாதுசேனன் முடிவுக்குக் கொண்டுவந்து 459 ஆம் ஆண்டு அநுராதபுரத்தின் மன்னனாய் முடிசூடிக் கொண்டார்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியிற்தான் மேற்படி மகாநாம தேரரினால் கி.பி 5 ஆம் நூற்றாண்டளவில் பௌத்த – அரசியல் – வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் முன்னைய பதிவுகளில் இருந்து திரட்டியும், தொகுத்தும், புனைந்தும் வரையப்பட்டது. அவ்வாறு அவர் எழுதியதற்கும் அப்பால் பிற்காலகட்ட வரலாற்றுச் சூழல்களில் அவ்வப்போது தேவைப்பட்ட இன, மத, அரச நோக்கங்களுக்குப் பொருத்தமாக மகா வம்சத்தில் விஷமத்தமான இடைச் செருகல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வா
ளர்கள் கருதுகின்றனர்.
இந்நூலில் சொல்லப்படுபவை எவ் வளவு தூரம் சரி – பிழை, நல்லது – கெட்டது, உண்மை – பொய் என்பனவற்றிற்கு அப்பால் அது, அரசியல்ரீதியாக சிங்கள பௌத்தர்களின் மனப்பாங்கையும் அரசியல் போக்கையும் வடிவமைக்கும் ஒரு கருத்தியலாய் நடைமுறை அரசியலில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தியாவில் பேரரசு எழ அது இலங்கைக்குப் பரவியது. இந்தியாவில் தேரவாத பௌத்தம் எழ அது இலங்கைக்குப் பரவியது. இந்தியாவில் மகாயான பௌத்தம் எழ அது இலங்கைக்குள் நுழைந்து சவாலாய் எழுந்தது.
இவ்வகையில், இந்தியா தொடர்பாக இலங்கையில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள் வெறுமனே அவ்வப்போதைய காலகட்டங் களுக்குரிய வரலாற்றுத் துடிப்பு நிலையாக (Historical trend) மட்டுமன்றி அதனையும் உள்ளடக்கிய நீண்டு நெடிய வரலாற்று வளர்ச்சிப் போக்குக்கு (Historical process) உரியதாயும் அமையும் நிலையில் அது இலங்கையின் வரலாற்றியலாயும் (Historiography) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வரலாற்றைப் பார்க்கும் பழக்கப்பட்ட ஒரு பக்கப் பார்வை இயலாய் இது அமைந்துள்ளது. இதனை ‘மகாவம்ச மனப்பாங்கு’ என்று அழைப்பர்.
தொடரும்…