Tamil News
Home செய்திகள் இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் தகனம் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் தகனம் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக எரியூட்டுவது கண்டனத்திற்குரியது என இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்பிடிஐ) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது வரையில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பத்தாயிரத்தை நெருக்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், “முஸ்லீம்களின் முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது  அவர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர்” என முன்னதாக இலங்கை முஸ்லிம்கள்  குற்றம்சுமத்தியிருந்தன.

“ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தாலோ, இல்லை கொரோனாவால் இறந்ததாகச் சந்தேகப்படப்பட்டாலோ, அவரின் சடலத்தைத் தகனம் செய்யப்படும்.” என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கடந்த ஏப்ரல் 12-ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை, “அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம்.” என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக,  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாள்வது தொடர்பான உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களில் கூட இத்தகைய எரியூட்டும் வழிகாட்டுதல்கள் இல்லை என்றும், இலங்கை அரசின் இத்தகைய சிறுபான்மை மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம்தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

”இத்தகைய நெருக்கடியை நீக்க வலியுறுத்தி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அரசியல் காரணங்களுக்காகக் கோரிக்கையைச் செவிமடுக்க முன்வரவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.” என்று மாநில தலைவர் நெல்லை முபாரக், அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளவர்,” உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version