அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் இலங்கையில் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும்தான் சுதந்திரம் – அசாத் சாலி

இலங்கையில் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும்தான் சுதந்திரம் – அசாத் சாலி

இலங்கையில் சுதந்திரம், பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது  என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சுதந்திர சுவாசக்காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும் இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுதந்திர தினம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே    இவ்வாறு கூறியுள்ளார்.

“அந்நிய அடக்குமுறைகளில் இருந்து தாய் நாட்டை விடுவிக்கும் சுதந்திரப் போராட்டத்தில் சிங்கள,இந்து, முஸ்லிம், கத்தோலிக்க தலைவர்கள் உழைத்த உண்மையை எவரும் மறக்க முடியாது. ஆனால் அரசின் இன்றைய செயற்பாடுகள் இந்த உண்மைகளை மறைக்கும் வகையில் உள்ளமைதான் பெரும் கவலையாகும்.

அரசியல், சமூக, மத சுதந்திரங்கள் மாத்திரமின்றி இருப்புக்களை இழக்கும் சூழ் நிலையுமே இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவை, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்தாலும் பரவாயில்லை. பழிவாங்கலுக்காக திட்டமிட்டு நடத்தப்படுவதுதான் கவலையளிக்கின்றது.

எல்லோருக்கும் உரித்தான நாட்டின் சுதந்திரம் பெரும்பான்மை சமூகத்திற்கும், அவர்களது மதத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய மதங்களையும் மலினப்படுத்தியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிமுறைகளை மீறி முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதும் மலினப்படுத்தும் மன நிலைகள்தான்.

இந்த அரசாங்கத்தின் மன விகாரங்களை விளக்கியுள்ள முஸ்லிம்கள், சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் ஒதுங்கியிருப்பதே சிறந்தது. இவ்வாறு ஒதுங்கியிருந்தாலும் நமது நாட்டுப்பற்றுக்களை வேறு வடிவில் வெளிப்படுத்த தவறவிடக் கூடாது என்றார்.

Exit mobile version