இலங்கையில் பெண்கள் பொருளாதார ரீதியாக பாதிப்பு

இலங்கையில் 65 இலட்சத்துக்கும் அதிகமான, தொழில்புரியும் வயதுடைய பெண்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 தொழிற்; படை கணக்கெடுப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 71.1 சதவீதமானோர் தொழில் புரிவதற்கான அல்லது தொழிலை தேடுவதற்கான எதிர்பார்ப்பை கொண்டிருக்கவில்லை என அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், நாட்டில் 26 இலட்சத்துக்கும் அதிகமான தொழில்புரியும் வயதுடைய ஆண்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாக இருப்பதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் பொருளாதார ரீதியாக செயலற்ற மொத்த சனத்தொகை 90 இலட்சத்து 23 ஆயிரமாக இருந்தது எனவும் அவர்கள் நாட்டின் தொழிற் படையில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதார ரீதியாக செயலற்ற சனத்தொகை 88 இலட்சத்து 90 ஆயிரமாக பதிவாகியிருந்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.