இலங்கையில் நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு – இறக்குமதி செய்ய முடிவு

03. இலங்கைக்கு ‘200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது’ என்று அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ‘இதற்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்தை விரைவில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்கனவே பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அவசியமான தேங்காய்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்து குறித்த குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
‘இதற்கமைய அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் விரைவில் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல முக்கிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, இலங்கையில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாட்டினால் அனுமதி பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதேநேரம், உப்புக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற ஐயத்தினால் இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது