பொய் – புளுகு – உருட்டு – பிரட்டு – திரிபு என்பனவற்றிற்கு அப்பால் வரலாற்றை அதன் இயல்பான வளர்ச்சிப் போக்குகளால் அடையாளம் காணவும் கணிப் பீடு செய்யவும் வேண்டும்.கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதச் சித்தாந்தத்திற்கான அடிப்படை ஐதீகமாக விளங்கும் ‘தம்மதீப’ கோட்பாட்டை அதன் வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து அறிவியல் பூர்வமாகச் சரியாக எடைபோட வேண்டும்.
புவிச்சரித இயலின்படி சிறு பாக்குநீரிணை யால் இந்தியாவிலிருந்து இலங்கை பிரிக்கப்பட முன்பு இலங்கை தென்னிந்தியாவின் ஒரு தொடர் நிலப்பரப்பாக விளங்கியது. இறுதிப் பனியுகத்தின் பிற்பகுதியில் இலங்கை கடலால் பிரிக்கப்பட்டு ஒரு தீவானது.
தென்னிந்தியாவில் மக்கள் பரம்பல் ஏற் பட்டபோது அதே தொடர் மக்கள் பரம்பல்தான் இலங்கையிலும் உருவானது. குறிப்பாக, இலங்கை யில் அரசுகள் உருவாகுவதற்கான காலகட்ட மக்கள் பரம்பலைப் பார்க்கையில் தென் இந்தியாவில் காணப்பட்ட அதே பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் கூட்டங்களே கி.மு 1000 ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்தே இலங்கையில் வாழ்ந்தனர். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஈழத் தமிழ், சிங்களம் என்ற வேறுபாடுகள் அப்போது இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே பெருங்கடல் பண்பாட்டு மக்கள் கூட்டத்தினரே. மேலும் குறிப்பாக, பௌத்தம் தோன்று முன்பும், அத்துடன் பின்னாளில் பௌத்தம் இலங்கைக்கு வரமுன்புமான கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்கே கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டும், வடமத்தி யில் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டும், தெற்கே திஸ்ஸமகாராமவைத் தலைநகராகக் கொண்டும் அரசுகள் தோற்றம் பெற்றன. இதில் மூன்று அரசுகளும் ஒரே பெருங்கற் பண் பாட்டினத்தவர்கள் மத்தியிலேயே எழுந்தன. அரசுகளுக்கு ஒரே ஒரு மொழிதான் விளங்கும். அது அதிகாரம் எனும் மொழியே. தாய் – பிள்ளை, தந்தை – மகன், அண்ணன் – தம்பி, தமிழன் – சிங்களவன், மலையாளம் – கன்னடம், அரபு – பாரசீகம் என்ற வேறுபாடுகளைக் கடந்து அதிகாரம் அரச வடிவில் பரவும்.
உலகில் தோன்றிய முதலாவது பேரரசு கி.மு 2334 ஆம் ஆண்டு உலகின் முதலாவது சக்கரவர்த்தியான சாகோன் (Sargon) தலைமையில் இன்றைய மத்திய ஈராக்கில் தோன்றிய அக்காட் (Akkad) பேரரசாகும். ஒரு சிறிய அக்காட் நகர அரசு நண்டு கால்கள் அகட்டுவது போல அண்டை அயல் அரசுகளை ஆக்கிரமித்தவாறு துருக்கி, சிரியா உட்பட்ட அகன்ற பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியது. அதிகாரத்தின் அதியுயர் சின்னமான நிரந்தர இராணுவத்தை பூமியிலும் வரலாற்றிலும் முதன்முறையாக சாகோன் கட்டமைத்தார்.
இதன் வழி அதிகாரத்திற்காகச் சண்டையிடு வது எந்தொரு அரசினதும் இயல்பான இரத்த ஓட்டமாகும். சோழ – சேர – பாண்டியர்களும் அப்படித்தான் அடிபட்டார்கள். கோட்டை – மாயா துன்ன – றைகம இராச்சியங்களும் அவற்றின் உடன் பிறந்த சகோதரர்களும் தம்மிடையே அப் படித்தான் அரச அதிகாரத்திற்காகச் சண்டையிட்டார்கள்.
அதிகாரம் பற்றிய இரத்தமும் தசையுமான ஒரு வரலாற்று உதாரணம் இங்கு கவனத்திற்குரியது. ‘அதிகாரமே எனது ஆசைநாயகி’ – எஜமானி (‘Power is my mistress’) என்று கூறினார் நெப்போலியன் (Napoleon). அதே நெப்போலியன் இந்த பூமியில் தனக்கு அதிக அன்புக்குரியவளாகச் சொல்லியது ஜொசபீன் (Josephine) எனும் தனது பேரன்புக்குரிய காதல் மனைவியைத்தான் ( Napoleon said it over and over, again and again that the only woman he ever really loved was Josephine). ஆனால், அரசியல் அதிகாரத்தின் பொருட்டு ஆஸ்திரிய இளவரசியான Archduchess Marie – Louise என்னும் பெண்ணை நெப்போலியன் மணக்கத் தீர்மானித்ததை ஜோசபின் ஆட்சேபித்த போது, ‘சிம்மாசனத்தில் அவளும் இதயாசனத்தில் நீயும்’ என்று ஜொசபீனிடம் நெப்போலியன் கூறிய பதில் வியப்பளிக்கக்கூடியதாய் அமைந்தது.
அரசியல் அதிகாரம் சார்ந்த இத்தகைய வர லாற்றுப் புரிதலின் பின்னணியிற்தான் இந்தியா – இலங்கை – ஈழத் தமிழர் – சிங்களவர் சார்ந்த புவிசார்-அரசியல் போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கி.மு 1000 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதான இறைவனால் ‘ வாக்களிக்கப்பட்ட நாடு’ (‘The Promised Land’) என்ற யூதக் கோட்பாடும், கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு- ‘தம்மதீப’ – Chosen Land என்ற கோட்பாடும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. அதாவது, இவை இரண்டும் அவையவை சார்ந்த வகையில் ஒத்த புவியியல் அமைவிட நெருக்கடியில் இருந்து பிறந்தவை.
மேலே குறிப்பிடப்பட்டவாறு கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் படையெடுப்பின் போது கால் நூற்றாண்டு காலம் அநுராதபுர அரசு கைப்பற்றப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர் மகா சங்கத்தின் தலைமை மதகுருவான மகாநாம தேரர். பாண்டியர்களிடமிருந்து அநுராதபுர அரசை மீட்டெடுத்த இவரது மருமகனான மன் னன் தாதுசேனனை தலைமறைவாகப் பேணிப் பாதுகாத்து அநுராதபுர இராச்சியத்தை மீட்க வழி கோலியவரும் இவர் என்ற வகையில் மகாநாம தேரரின் மனதிலும் சிந்தனையிலும் அக்கால அரசியல் சூழலின் தாக்கம் பெரிதும் உறைந்திருக் கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், இதற்கு முன்னைய நூற்றாண்டில் சோழ நாட்டைச் சேர்ந்த மகாயான பௌத்த துறவியால் அநுராதபுர மன்னன் மகாசேனன் தேரவாதத்தில் இருந்து மகா ஞானத்துக்கு மதமாற்றப்பட்டு, தேரவாத பௌத்த மகா சங்கம் தடை செய்யப்பட்டு, தேரவாதம் இன்னலுக்கு உள்ளானவையும் ஒன்று சேர்த்த ஒரு வரலாற்றுப் பின்னணியில் மகாநாமரின் மனதில் இந்திய – தென்னிந்திய – தமிழின எதிர்ப்பு வாதம் குடிகொள்
வது இயல்பானது. இக்காலகட்ட புவியியல் – அரசியல் – வரலாற்றுச் சூழலில் மகாநாமரால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் தமக்கு எதிரான புவிசார் அரசியல் தாக்கத்திற்கு முகம் கொடுக் கக்கூடிய வகையிலான கருத்தை அவரது நோக்கு நிலையில் இருந்து இயல்பாகவே கொண்டிருக்க முடிகிறது.
அதனாற்தான் தீபவம்சம் எனும் நூலில் மிகச் சிறிதளவாக எழுதப்பட்டிருந்த கி.மு இரண்டாம் நூற்றாண்டில் முடியாதிக்கப் போட்டிக் காக நிகழ்ந்த எல்லாளன் – துட்டகாமினி யுத்தத்தை மகா வம்சத்தில் மகாநாம தேரர் ஒரு காப்பிய வடிவில், அதற்கு இந்திய எதிர்ப்பு – தமிழின அழிப்புப் பரிமாணம் கொடுத்து எழுதியிருக்க முடியும் அல்லது அதனை ஒட்டிப் பின்னோர் இடைச் செருகல்களைச் செய்திருக்க முடியும்.
எல்லாளன் – துட்டகாமினி யுத்தத்தில், இலட்சக்கணக்கானோர் [தமிழர்] மடியும்படி நேரிட்டது தனக்குக் கவலை அளிப்பதாக மன்னன் துட்ட காமினி வருந்துவதாகவும் அப்போது பௌத்த துறவிகளின் குழு ஒன்று அவர் முன் தோன்றி அவரை ஆற்றுப்படுத்தப் பின்வருமாறு கூறுவதாக வும் ஓர் உரையாடல் வருகிறது.
‘இந்தச் செய்கையின் காரணமாக நீ சொர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ் வித தடையும் ஏற்படாது’ என்று துறவிகள் மன்னனுக் குக் கூறுவதுடன், அவ்வாறு கொல்லப்பட்ட இலட் சக்கணக்கானோர் [தமிழர்] “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், மிருகங்களை விடவும் உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்” என்று பௌத்த துறவிகள் மன்னனு க்கு எடுத்துரைத்ததாக மகாவம்சம் அத்தியாயம் 25 பத்தி 110 இல் கூறப்படுகிறது.
இது பிற்காலத்தில் மகாவம்சத்தில் சேர்க் கப்பட்ட ஓர் இடைச்செருகலாக இருக்கலாம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அது உண்மையோ – பொய்யோ, இடைச் செரு கலோ – இல்லையோ என்பதற்கு அப்பால் சிங்கள பௌத்தர்கள் தமது புனித வரலாற்று நூலாக மதிக்கும் மகாவம்சத்தில் இக்கூற்று நூற்றாண்டுகளையும் கடந்து இருப்பதானது சிங்கள பௌத்த மக்களின் மனங்களை வடிவ மைக்கும் ஒரு கருத்தியலாகவும், இனப் பகை மைக்கு என்றும் தூபமிடவல்ல கருத்தியல் மண்டலத்தை அவ்வப்போதைய அரசியல், மதத் தேவைகளுக்காக உருவகிப்பதற்கேற்ற ஒரு பலம் பொருந்திய ஆயுதமாகவும் பார்க்கப்படுகின்றது.
மேலும், கி.பி 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அநுராதபுர அரசு சோழப் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிலையில், சுமாராக 1500 ஆண்டு காலமாய் தலைநகராய்த் தொடர் வளர்ச்சி அடைந்து வந்த அநுராதபுர தலைநகரம் வேரோடு பிடுங்கப்பட்டு பொலநறுவையில் நாட்டப் பட்டது. அதன் பின்பு இன்றுவரை அத்தலைநகரம் அநுராதபுரம் திரும்பவில்லை.
மேலும், கி.பி 1214 ஆந்திராவில் இருந்து கலிங்கத்து மாகனால் (Magha of the Kalinga’s) பொ லநறுவை அரசு கைப்பற்றப்பட்டு 1255 ஆம் ஆண்டுவரை பௌத்த மத நிந்தனையுடன் கூடிய பயங்கர ஆட்சி நிகழ்ந்ததாக வரலாற்றில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மாகனின் படையெடுப்பைத் தொடர்ந்து பொலநறுவையில் இருந்து சிங்கள இராசதானி இலங்கையின் மத்திய மலைப்பகுதி, தென்மேற்குப் பகுதி நோக்கி நகர்ந்து கண்டி மற்றும் இன்றைய கொழும்புத் தலைநகரை நிலைக்களமாகக் கொண்டு ஸ்தாபிதம் அடைந்தது என்ற வரலாற்றுப் போக்கு சிங்கள மக்களின் மனங்களில் பசுமரத்தாணியாய் வேரூன்றி உள்ளது.