Home செய்திகள் இலங்கையில் சீன மொழியைத் தொடர்ந்து இந்தி மொழியின் பயன்பாடும் அதிகரிப்பு

இலங்கையில் சீன மொழியைத் தொடர்ந்து இந்தி மொழியின் பயன்பாடும் அதிகரிப்பு

118 Views

May be an image of 4 people

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு மொழியும் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை.

எனினும், அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு அப்பாற் சென்று கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அரச மொழியான தமிழ் மொழி அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து தமிழ்  மொழி பிரதான இடங்களில் சேர்க்கப்பட்டன. ஆனாலும் சீன மொழியின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், தற்போது இந்தி மொழியின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தி மொழியில் சில தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழிகளில் முறையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பத்திரிகை ஆசிரியரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன்,தனது முகநுாலில் இது தொடர்பில்,

“கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி – சீன மொழிகளிலும் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. இந்த விமான நிலையத்துக்கு நான் அவ்வப்போது சென்று வருபவன். ஆனால் இந்தப் பெயர் பலகைகளை ஒருபோதும் கண்டதில்லை.

இன்று திங்கட்கிழமை இரவு சென்றபோது சிங்களம், தமிழ் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்திய, சீன மொழிகளில் மின்சாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெயர் பலகைகளை உற்று நோக்கிய போது என் கண்ணுக்கு இவை தெரிந்தன.

அப்படியிருக்காது எனது கண்தான் ஏதோ பிழைபோல் என்று நினைத்துக் கொண்டு நன்றாக நிமந்து உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை—

பொருளாதார நெருக்கடிச் சூழலில்தான் விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளிலும் பெயர்பலகைகள் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கொள்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பிரதேசங்களில் உள்ள சில வீதிகள், மிகப் பெரிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன ஹோட்டேல்கள் போன்றவற்றில் உள்ள பெயர் பலகைகள் தனிச் சீன மொழிகளில் மாத்திரம் உள்ளமை ஏற்கனவே தெரிந்த கதை.

அதுவும் அம்பாந்தோட்டையில் தனிச் சீன மொழிதான்.

ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சீன மொழியில் பெயர் பலகைகள் இருக்கவில்லை. கொழும்பில் இந்தியத் தூதரகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் இருந்ததாக நான் காணவில்லை.

ஆனால் முதன் முறையாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளில் பெயர் பலகைகளை இன்று கண்டேன்.

இந்தியாவும் சீனாவும் இலங்கைத்தீவில் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பொருளாதார ரீதியில் எப்படிச் செயற்படுகின்றன என்பது பற்றிய விபரங்கள் எனது அரசியல் கட்டுரைகளில் உண்டு.

ஆகவே இந்தப் பெயர் பலகைகள் பற்றி மேலதிக விமர்சனங்கள் தேவையில்லை.

சிறு விளக்கம்– எங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிந்துகொள்வதுதான் செய்தி. அது வீடாகவும் இருக்கலாம் நாடாகவும் இருக்கலாம் ஏன் உலகமாகவும் இருக்கலாம்.

ஆகவே இலங்கைத்தீவின் எதிர்காலம் பற்றி கீழே உள்ள செய்திப் படம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

குறிப்பாகத் தமிழர்களுக்கு.

இந்திய ரூபாய்களை இலங்கையில் பயன்படுத்தலாம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்ததாகச் செய்திகள் வெளியான நாளில் இந்தி மொழி பெயர் பலகை விமான நிலையத்தில் வந்ததா? அப்படியானால் ஏன் சீன மொழியும் அந்தப் பெயர் பலகைகளில் இணைந்தது?

2009 இற்குப் பின்னரான சூழலில் அதுவும் 2015 இற்குப் பின்னர் இது புரியாத புதிர் அல்ல“. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version