இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது கடந்த பல மாதங்களாக இல்லாது இருந்த நிலையில், சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரும் இலங்கையர்களுக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், சமூகத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திவுலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சுமார் 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவரின் மகள் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதே போல் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் புங்குடுதீவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு இன்றைய தினம் மேற்கொண்ட (5) பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வடமராட்சி பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட 70 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.