இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை – அலன் கீனன்

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடம் கறுப்பு ஜுலையின் 40 ஆவர் நினைவுதினம். இலங்கை தலைநகரில் ஏற்பட்ட வன்முறைகளால் 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரம் பேர் நாட்டைவிட்டு தப்பியோடியிருந்தனர். பல ஆயிரம் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அதுவே முழு அளவிலான போருக்கு வழிவகுத்திருந்தது.

இந்த போரில் பல ஆயிரம் மக்கள் கொல்ப்பட்டனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர் திரும்பிவரவில்லை. தமது பிள்ளைகளை தேடி உறவினர்கள் கடந்த 5 வருடங்களாக போராடி வருகின்றனர். அங்கு மனித புதைகுழிகள் உள்ளன.

ஆனால் இவை எவற்றுக்கும் அங்கு நீதி கிடைக்கவில்லை. வாக்குறுதிகளை வழங்குவது இலங்கை அரசுகளின் வழக்கமாகிவிட்டது. விசாரணைகளை அரசுகளே குழப்பி அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லாது தடுக்கின்றன.

உதாரணமாக உடலகம ஆணைக்குழுவை கூறலாம். மகிந்தாவே அதனை அமைத்தார். அவரின் ஆட்சிக்காலத்தின் முதலாண்டு பகுதியில் இடம்பெற்ற 17 படுகொலைகள் தொடர்பான விசாரண அது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர்கள் அனுபவங்களை கற்பதும், நல்லிணக்கப்பாடும் என்ற குழுவை அமைத்தனர். இந்த குழு காலத்தை கடத்துவதிலும், அனைத்துலக விசாரணைகளை தடுப்பதிலும் தான் கவனம் செலுத்தியது. பொதுமக்களின் படுகொலைகளில் படையினருக்கு உள்ள தொடர்புகளையும் அது மறைக்க முயன்றது.

 

எனவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் அங்கு விசாரணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுடன் அவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் அதற்கான அனைத்துலக உதவிகளும் பெறப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.