‘இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்’ என்று தமிழகத்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தங்களது வாழ்வாதாரத்தை தேடி செல்லும் மீனவர்களை கைது செய்து, அவர்களது உடைமைக்கும், உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது’ என்றும் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘இந்த செயற்பாடுகள் தமிழக மீனவர்களிடையே மிகப்பெரிய மனவேதனையை உருவாக்கியுள்ளது’.
‘சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி மனித நேயத்துடன் நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட வேண்டும்’ என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ‘இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்காக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று புதுச்சேரி மீனவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விடயத்தை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ‘தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்வதற்காக தங்களுக்கு ஆயுதம் வழங்கப்பட வேண்டும்’ என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.