நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதே உப்பு தட்டுப்பாட்டுக்கு காரணமென உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில், 30 ஆயிரம் மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருந்தது.
எனினும் அவற்றை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, உப்புக்கு தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்டுள்ள உப்பு எதிர்வரும் வாரங்களில் நாட்டை வந்தடைந்தவுடன், அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், உப்புக்கான தட்டுப்பாடு குறைவடைவதுடன் விலையும் குறைவடையும் என்றும் எதிர்பார்ப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது உப்புக்கான விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஒரு கிலோகிராம் உப்பு 350 முதல் 450 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.