இலங்கைத் தீவின் மீதான கடல்வழி அந்நிய படையெடுப்புகள் பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 9 – மு.திருநாவுக்கரசு

இலங்கைக்கு வடக்கே இருந்து, பாக்கு நீரி ணையைக் கடந்து இந்தியாவில் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்த படையெடுப்புகளுள் போலவே, இந்துமாகடல் தழுவிய வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனா கடல்சார் பேரரசாக எழுச்சி பெற்றபோது கி.பி 1412 ஆண்டு சீனக் கடற்படைத் தளபதி ஷென்ங் ஹே (Admiral Zheng He) தலைமையில் கொழும்பு இராச்சியம் படையெடுப்புக்கு உள் ளாகி மூன்று ஆண்டுகள் அவரது இராணுவப் பிடியின் கீழ் சின்னாபின்னமாகியது. இதுதான் வரலாற்றில் முதல்            முறையாக தெற்காசியக் கடல் வழியே இலங்கைக்கு வந்த முதலாவது படையெடுப் பாகும்.
இதைத் தொடர்ந்து கி.பி 16ஆம் நூற் றாண்டில் ஐரோப்பிய பேரரசுகள் உலகளாவிய கடலாதிக்கத்தைப் பெறத் தொடங்கிய பின்ன ணியில் 1505 ஆண்டு போத்துக்கீஸரும், 1602 ஆம் ஆண்டு டச்சுக்காரரும் (கைப்பற்றியது 1658) 1796 ஆம் ஆண்டு பிரித்தானியரும் கடல் வழியே இலங்கையில் கால் பதித்தனர்.
1796 ஆம் ஆண்டு பிரித்தானியர் கடல் வழியே இலங்கையில் கால் பதித்தபோது பிரான் சுச் சக்கரவர்த்தியான நெப்போலியன் கூறிய பின்வரும் கூற்று மிகவும் கவனத்திற்குரியது.
“திருகோணமலையை யார் தன் கையில் வைத்திருக்கிறாரோ அவர் இந்துமாகடலை ஆள் வார்” (“He who controls Trincomalee controls the Indian Ocean’ – Napoleon in 1796).மேலும், கடல்சார் ஆதிக்கம் பற்றி அமெரிக் கக் கடற்படைத் தளபதியான அல்பிரெட் டயர் மாகன் (Admiral Alfred Thayer Mahan) கூறிய இரண்டு கூற்றுக்கள் முக்கியமானவை.
‘இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்து கிறாரோ அவர் ஆசியா மீது ஆதிக்கம் செலுத்துவார்”
(“Whoever controls the Indian Ocean will dominate Asia’ – 1897).‘கடலை ஆள்பவன் உலகை ஆள்வான்”(“Whoever controls the seas, rules the world’).முதலில் இலங்கைக்கு வடக்கே இருந்து சிறு பாக்குநீரிணையைத் தாண்டி இந்தியாவில் இருந்து 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இலங்கைக்கு ஏற்பட்ட சவால்களுக்கு அப்பால் 15 ஆம் நூற்றா ண்டில் இருந்து கடல் சார்ந்த பேரரசுகளான சீனா, போத்துக்கல், டச்சு, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற அரசுகளால் கடல் சார் தென்புறத்திலிருந்து இலங்கைக்குச் சவால்கள் உருவாகின. இத்தகைய சவால்கள் அனைத்தும் இலங்கையின் அமைவிடம் சார்ந்தவை.
இலங்கைத் தீவுக்கு வடக்கிலிருந்து பாக்குநீரிணைக்கூடாக இந்திய ஆதிக்கமும், தெற்கே கண்டங்களையும் பெரும் கடல்களையும் கடந்த உலகப் பெரு வல்லரசுகளின் இந்து மாகடல் ஆதிக்கமும் கூடவே இதன்வழி உலகம் தழுவிய அரசியல் ஆதிக்கமும் இணைந்த பெரும் அரச ஆதிக்க வலைக்குள் இலங் கைத் தீவும் அதன் இனப்பிரச்சினையும் சிக்குண்டுள்ளன. இந்தவகையில், ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலையானது சிங்கள பௌத்த அரசுடனும் அதனுடன் தொடர்புள்ள பல்வேறு அரசுகளி னது ஆதிக்கங்களுடனும் இணைந்த வகையில் படச்சட்டத்துக்குள் (Frame) கூட்டிக் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இந்தவகையில், இலங்கையின் இனப் பிரச்சினையும் ஈழத் தமிழருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் இலங்கைத் தீவின் எல்லைக்கு உட்பட்ட ஒன்றாக மட்டுமன்றி அது அண்டை நாடு, சீனா, மேற்குலக வல்லரசுகள், இந்நாடுகள் அனைத்தும் சார்ந்த கூட்டாளி நாடுகள் ஆகியவற்றின் நலன்கள் தழுவிய கூரிய கத்தி மாலையாய் ஈழத் தமிழரின் கழுத்தில் இறுக மாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பலம் பொருந்திய பல் பரிமாணக் கத்தி மாலையாய் ஈழத் தமிழரின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை மனம் போன போக்கில் எழுமாத்திரமாய்க் கையாளாது தெளிந்த அறிவுடனும் அதிக நிதானத்துடனும் கையாள வேண்டும்.
தெற்கே அம்பாந்தோட்டையிலும் தென்மேற்கே கொழும்பிலும் நூற்றாண்டு தழுவிய துறைமுக ஒப்பந்தங்களுக்கு ஊடாகச் சீனா இலங் கையில் கால் பதித்துள்ளது. இது இலங்கைக்குத் தெற்கே Diego Garcia அமெரிக்கா வின் மிகப்பெரும் இராணுவத் தளத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாய் அமைவதுடன், அது அமெரிக்காவின் இந்துமாக டல் ஆதிக்கத்துக்கும் சவாலாயும் அமைந்துவிடும். கூடவே இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்புக்கும் இருப்பிற்கும் பெரும் சவாலாய் அமைந்துவிடும்.
இந்நிலையில், இந்திய – சீன – அமெரிக்க முக்கோண மையத்துக்குள் இலங்கையும் ஈழத் தமிழர் பிரச்சினையும் ஜீவ மரண போராட்டத் திற்குள் சிக்குண்டுவிடும். இதில் முதல் பலி யாகக்கூடியது அரசற்ற அப்பாவி ஈழத் தமிழர்தான்.இதனைத் தொடராது தொடர் நவீன வரலாற்று வளர்ச்சிக்கூடாகத் தொடர்ந்து நோக்க வேண்டி யது அவசியம்.
தொடரும்…