இலங்கைக்கு 2025 எவ்வாறு அமையும்?- அகிலன்

2024 ஆம் ஆண்டு அதிரடியான அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திய ஒரு தோ்தல் ஆண்டாக இருந்தது. பிறந்திருக்கும் புதிய ஆண்டும் ஒரு தோ்தல் ஆண்டா கத்தான் இருக்கப்போகின்றது. ஆனால், இந்த வருடத்தில் நடை பெறப்போகும் தோ்தல்கள் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவ தில்லை. கடந்த வருடத்தில் இடம்பெற்ற மாற்றங்களை மேலும் பலப்படுத்தும் ஒரு வருடமாகவே இந்த வருடம் அமையும் என்று எதிா் பாா்க்கலாம்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தோ்தல் கள் இந்த வருடத்தில் நிச்சயமாக நடைபெறும். இதற்கான தோ்தல்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும். அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார காரணங்களைக் காட்டி அதனை ஒத்திவைத்தாா். அது உடனடியாக நடைபெற்றாக வேண்டும். உயா் நீதிமன்றமும் அதற்கான உத் தரவைப் பிறப்பித்துள்ளது.

பொதுத் தோ்தல் தோல்வியிலிருந்து எதிா்க்கட்சிகள் இன்னும் மீளவில்லை. அனைத்தும் பிளவுபட்டு, உட்கட்சி முரண்பாடுகளால் தீவிர மான அரசியலை முன்னெடுக்க முடியாமலும், தமது கட்சிகளைக் கட்டியெழுப்ப முடியாமலும் உள்ளன. ஆக, உள்ளூராட்சி தோ்தல்களை நடத்தி, தமது அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதற்கு ஆளும் தேசிய மக்கள் முன்னணி நிச்சயமாகத் திட்டமிடும். மாா்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்கள் நடைபெறலாம்.

அதனையடுத்து இவ்வருட நடுப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தோ்தல்களயும் நடத்தப்போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது. சுமாா் ஆறு வருட காலம் மாகாண சபைகள் செயற்படவில்லை. மாகாண சபைத் தோ் தல் முறையில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரு வதற்கான முயற்சிகள் முன்னெடுக் கப்பட்ட நிலையிலேயே மாகாண சபைகளுக்கான தோ்தல் கள் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது இதற்கான தோ்தல்களை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான அணியான ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்தியாவின் அழுத்தம் மற்றும், தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பின் போது, கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மாகாண சபைத் தோ்தல்களை நோக்கி அரசாங்கம் செல்ல வேண்டியிருக்கும். புதிய அரசியலமைப்பு வரும்வரையில், 13 ஆவது திருத்தமும், மாகாண சபை முறையும் தொடரும் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் வாக்குறுதியாகவும் இருந்தது.

தற்போதைய நாட்டின் அரசியல் கள நிலைமைகளின் அடிப்படையில் பாா்க்கும் போது தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு உயா்ந்த நிலையில்தான் இருக்கின்றது. விலைவாசி உயா்வு, அரிசி, உப்பு போன்ற சில அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால், அரசின் மீது எதிா்க்கட்சிகளால் விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், எதிா்க்கட்சிகள் பலமானதாகவும், கட்டுக்கோப்பானதாகவும் இல்லை. உட்கட்சி முரண்பாடுகளும் தலைதுாக்கி உள்ளன. அதனால், அரசியல் ரீதியாக அநுர அரசாங் கத்துக்கு இந்த வருடத்தில் சவால்கள் எதுவும் உருவாகப் போவதில்லை.

பொருளாதார நிலைமைகளையிட்டுப் பாா்க்கும் போது, பெரும்பாலும் ரணில் போட்ட பாதையில்தான் அநுர அரசும் பயணிக்கின்றது. முக்கியமாக, சா்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இருக்கும் உடன்படிக்கையைத் தொடா்வது என்பதுதான் அவா்களுடைய திட்டமாகவும் இருக்கின்றது. அதேவேளையில், மேற்கு நாடுகளுடனான உறவுகளைத் தொடா்வது, பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைவது என்பனவும் அநுர அரசின் வெளியுறவுக்  கொள்கையின் முக்கிய அம்சங்களாக இருக்கப்போகின்றது. இது பெருமளவுக்குப் பொருளாதார நலன்களை அடிப் படையாகக் கொண்டதாகவே இருக்கும்.

பொருளாதார ஸ்திரத் தன்மையைப் பேண வேண்டும் என்பதிலும் அரசாங்கம் அக்கறையாக இருக்கின்றது. அநுர ஜனாதிபதியாகியிருக்கும் அதேவேளையில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருப்பதும் அரசியல் ரீதியில் ஒரு ஸ்திரத் தன்மையைக் கொடுத்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் டொலரின் பெறுமதி 300 க்கு குறைவாக வந்திருப்பது பொருளாதார ரீதியில் இலங்கை உறுதியாக நிலைக்கு வந்துகொண்டிருப் பதை மட்டுமன்றி, அதனை சா்வதேசம் உணா்ந்து கொண்டிருப்பதையும் வெளிப்படுத்துகின்றது.

பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற் கும், அதனை ஸ்திரமாகப் பேணிக்கொள்வதற்கும் அந்நியச் செலாவணியை அதிகளவுக்கு பெற்றுக் கொள்வதற்காக உபாயங்கள் அவசியம். அந்த வகையிலான சில திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாகவும் தெரிகின்றது. குறிப்பாக உல்லாசப் பயணத்துறையின் வளா்ச்சியில் அரசாங்கம் அக்கறை காட்டுகின்றது. அதன்மூலமாக மட்டுமே உடனடியாக அதிகளவுக்கு அந்நியச் சொலா வணியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2024 இல் இருபது லட்சத்துக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள் ளாா்கள். 2018 க்குப் பின்னா் இதுதான் அதிக தொகையாகும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோவிட் பெருந் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் படுத்துக்கிடந்த உல்லாசப் பயணத்துறை 2024 புத்தெழுச்சி பெற்றிருப்பதை காணலாம். இதன் மூலம் அதிக வருமானமும் நாட்டுக்கு கிடைத்தது. டொலரின் பெறுமதி குறைவடைய அதுவும் காரணம். 2025 இல் இதனை மேலும் அதிகரிப்பதற்கு அநுர அரசு திட்டமிடுகின்றது.

உல்லாசப் பயணத்துறையை வளா்ப்பதற்கு அரசுக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளன. குறிப்பாக, சீனாவுடனான நட்பு அவா்களுக்கு இந்த விடயத்தில் பெருமளவுக்கு உதவும். தமது நாட்டின் உல்லாசப் பயணிகளில் அதிகமானோரை இவ்வருடத்தில் இலங்கைக்கே அனுப்பப் போவதாக சீனா ஏற்கனவே இலங்கைக்கு உறுதியளித் திருக்கின்றது. அது பல இலட்சங்களாக இருக்கலாம். அதே வேளையில், இந்தியாவிலிருந்தும் அதிகளவு உல்லாசப் பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

இதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய அந்நியச் செலாவாணி இலங்கை யின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத் துவதற்கு வழிவகுக்கலாம். இவ்வருடத்தில் 30 இலட்சம் உல்லாசப் பயணிகளை இலக்கு வைத் துச் செயற்படப் போவதாக அரசாங்கம் கூறி யிருக்கின்றது. நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருப் பதால், அந்த இலக்கை அடைவது கடினமானதாக இருக்காது. ஆனால், இவ் வளவு உல்லாசப் பயணிகள் வரும்போது, அதற்கான கட்டமைப்புக் களையும் உருவாக்கிக்கொள்வது அவசியம்.

2024 இறுதியில் இந்தியாவுக்குச் சென்று வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இம்மாதம் சீனாவுக்குச் செல்கின்றாா். சீனாவிடமிருந்து அதிகளவுக்கு பொருளாதார நலன்களைத்தான் இலங்கை எதிா்பாா்க் கின்றது. ஜனாதிபதி விரும்பும் எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றித் தருவதற்காக பொறுப்பை ஏற்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உறுதியளித்திருக்கின்றாா். ஜனாதிபதியின் சீன பயணம் தொடர்பிலான திட்டங்களை வகுக்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பிரதித் தலைவர் கின் போயோங், சீன ஜனாதிபதியின் இந்த செய்தியை அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை எவ்வாறான ஒரு திட்டத்தை முன்வைக்கப்போகின்றது, இது தொடா்பில் இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்விகள் இப்போது எழுகின் றன. ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன சீனாவினால் அமைக்கப்பட்டன. இவை தொடா்பில் இந்தியா வின் கரிசனை உள்ள நிலையில், புதிதாக எவ் வாறான திட்டத்தில் சீனா இறங்கப்போகின்றது என்ற கேள்விதான் இப்போது கொழும்பு இராஜ தந்திர வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி யெழுப்புவதற்கு சீனாவின் உதவி அநுரவுக்கு தவிா்க்க முடியாததாக இருக்கின்றது. மறுபுறம், இந்த உதவிகளை வழங்குவதன் மூலமாக தமது பிராந்திய கேந்திர நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதும் பலப்படுத்திக் கொள்வதும் சீனா வின் இலக்காக இருக்கும். குறிப்பாக, கடந்த வருடத்தில் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை செய்யப்பட்ட ஆய்வுக் கப்பல்களை பிராந்தி யத்துக்குள் கொண்டுவருவது, பாரிய முதலீடுகள் மூலமாக இலங்கையில் தமது இருப்பைப் பேணிக் கொள்வது என்பனதான் சீனாவின் மூலோபாயத் திட்டங்கள்.

அசாங்கத்தின் பிரதான கட்சியான ஜே.வி.பி. சீனாவுடனான உறவுகளை நீண்டகாலமாகவே வைத்திருந்தது. மாவோவின் சிந்தனைகளுடன் ஜே.வி.பி.க்கு இருந்த பற்றுதல் அதற்குக் காரணம். இதனைப் பயன்படுத்தி இலங்கையில் தமது இருப்பைப் பலப்படுத்தும் சீனாவின் முயற்சிகளை இந்தியா ரசிக்கப்போவதில்லை. இதனை எவ்வாறு அநுர அரசு கையாளப்போகின்றது என்பதையும் பிறந்துள்ள புதிய ஆண்டில் காணக்கூடியதாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் 2025 இல் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை அடுத்த வாரத்தில் பாா்ப்போம்.