இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படும் 93 மஞ்சள் மூட்டைகள் கியூ பிரிவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்த மறைவிடத்தில் கறிமஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கியூ பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் 93 மஞ்சள் மூட்டைகளைக் கைப்பற்றினர்.
நேற்று இரவு கைப்பற்றப்பட்ட மஞ்சளை எடுப்பதற்கு யாரும் வருவார்கள் என பொலிசார் இன்று காலை வரை அங்கு பதுங்கியிருந்தனர். ஆனால் யாரும் அங்கு வரவில்லை. இந்த மஞ்சள் மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட வைக்கப்பட்டிருந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “பறிமுதல் செய்யப்பட்ட மூட்டைகளில் இருந்த அடையாளங்களைக் கொண்டு அவை எங்கிருந்து வாங்கி வரப்பட்டவை போன்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். ராமேஸ்வரத்தில் இதுபோல் ஏற்கனவே கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றியுள்ளோம்.
இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 3,000 ரூபாவிற்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே போதைப்பொருள், சந்தனமரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளோம்” எனக் கூறினார்.