இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதி பொறிமுறை ஒன்று அவசியம் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கைக்கு எதிராக  சர்வதேச நீதி பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து தொடர்ந்தும் கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஆராய்வதற்கும் சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வரும் நிலையில் இவ்வாறான பொறிமுறை அவசியம் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த சில வருடங்களில்,குறிப்பாக கடந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்களாக சிவில் சமூகக் குழுக்களுக்கான இடைவெளி பாதகமான முறையில் மட்டுப்படுத்தப்பட்டமையை அவதானிக்க முடிந்தது என்றும் மன்னிப்புச் சபை தெரிவித்து்ளளது.

இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக பல செயற்பாட்டாளர்கள்  நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அத்தோடு இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.