இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி – 20 நாடுகள் தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மாத்திரமன்றி இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இருப்பினும் இதன்போது கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடொன்றுக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அக்கூட்டத்தின் இறுதி அறிக்கையில் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வறிக்கையானது உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதுடன்,  இலங்கையின் கடன் நிலைவரம் தொடர்பில் உடனடித்தீர்வொன்றைக் கண்டறிவதற்கான அவசியத்தை ஏற்றுக்கொண்டிருப்பினும், அதனை முன்னிறுத்தி செயற்திறன்மிக்க திட்டங்களோ அல்லது நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை.

ஜி-20 அமைப்பானது சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்தரப்புக் கடன்வழங்கல் கட்டமைப்புக்களில் அங்கம்வகிக்கும் ஆதிக்கம் மிகுந்த நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

எனவே இவ்வமைப்பானது செயற்திறன்மிக்கவகையில் ஒருங்கிணையுமேயானால், அதனூடாக இலங்கைக்கு அவசியமான கடன்சலுகையை வழங்கவும், நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும்.

ஏனெனில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நாட்டுமக்கள்மீது இன்னமும் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. உயர்வான பணவீக்கம், மட்டுப்படுத்தப்பட்டளவிலான சமூகப்பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் என்பன மக்களின் வாழ்க்கைத்தரத்திலும், அவர்களின் உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் கடன்நெருக்கடியானது மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இயலுமையைப் பாதித்துள்ளது.

எனவே 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்படும் தாக்கத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாகவும், பொறுப்புக் கூறத்தக்கவையாகவும் அமைவதென்பது இவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் உருவாவதைத் தவிர்ப்பதற்கு இன்றியமையாததாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.