இறந்தவர்களை கூட நினைவுகூரமுடியாத நிலையில் தமிழர்கள்- தமிழ் மக்கள் பேரவை 

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டது ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்சமூகத்தினர்க்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது என தமிழ் மக்கள் பேரவை  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2009 இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் புல்டோசர் கொண்டு கடந்த (08.01.2021) அன்று இரவோடு இரவாக  இடித்தழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிதரும் சம்பவமாகும்.

இச்சம்பவம் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகக் கவலையளிப்பதாகவும் வேதனையைத் தருவதாகவும் இருக்கின்றது.

இந்த சம்பவத்தினையும் இதனை மேற்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உள்ளிட்ட பேரினவாத அரச இயந்திரத்தினையும் தமிழ்மக்கள் பேரவையானது வன்மையாகக் கண்டிக்கின்றது.

“போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், மற்றும் மாணவர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது”.

இந்த நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டது ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்சமூகத்தினர்க்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழர்களை பொறுத்தவரை பல்கலைக்கழகம் ஒர் அடையாளம் மட்டுமல்ல அது வரலாற்றை கடத்துகின்ற இடமாகவும் இருக்கின்றது. அங்கே இந்த சம்பவம் நடந்தேறி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. குறைந்தபட்சம் இறந்தவர்களை கூட நினைவுகூரமுடியாத நிலைமைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர் பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னெடுக்கும் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கும் தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவினை தெரிவிப்பதோடு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வினையாற்றுமாறும் தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.