Home செய்திகள் இரு வாரங்களைத் தொடும் அம்பிகையின் அறப்போர்- மெல்ல உருகும் பிரித்தானிய அரசு

இரு வாரங்களைத் தொடும் அம்பிகையின் அறப்போர்- மெல்ல உருகும் பிரித்தானிய அரசு

777 Views

பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகையின் அறப்போர் இன்றுடன் 13 ஆவது நாளை எட்டியுள்ளது.

இனப் படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும்  சிறீலங்கா அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா இடமளிக்கக்கூடாது உட்பட நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையாவது பிரித்தானியா நிறைவேற்ற வேண்டுமென நீரை மட்டு அருந்தி உண்ணாமல் தன்னை உருக்கிவரும் அம்பிகையின்  உடல் நிலை  இரு  வாரங்களை அண்மிக்கும் நிலையில் மிகவும் மோசமடைந்துள்ளது.

அம்பிகையின் கோரிக்கைக்கு பதிலளித்து போராட்டத்தை இடைநிறுத்தி அவரை காப்பாற்ற வேண்டிய பிரித்தானிய அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது. எனினும் பிரித்தானிய அரசியல் மட்டத்தில் தற்போது இப்போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமையை அறிய முடிகின்றது.

இந்நிலையில், அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒவ்வொரு நாழும் நடைபெறும் மெய்நிகர் எழுச்சி நிழகழ்வு வழமைபோல் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  மும்மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், மற்றும் ஆதரவாளர்களின் சிறப்புரைகளும் எழுச்சி கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, நேற்றைய 12 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வு சித்தி விநாயகர் ஆலயம், ஹரோ, லண்டனில் சிவகாமரத்தினம் சிவஸ்ரீ வாமதேவ வாமராஜ குருக்களினால் நிறைவேற்றப்பட்ட அம்பிகைக்கான சிறப்பு பூஜையுடனும் மன்னார் ஆயரின் சார்பில் மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம், தாயகத்திலிருந்து மௌலவி ரியாஸ் ஆகிய மதத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து, ஆளுங்கட்சியான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Dean Russel (Watford MP) அவர்கள் அம்பிகையின் போராட்டத்துக்க ஆதரவு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.

அதனையடுத்து முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) ஜேர்மனி சார்பாக திரு. தர்மலிங்கம் குமணன், தமிழகத்திலிருந்து திரைப்பட இயக்குநர்  சோழன் மு. களஞ்சியம் ஆகியோரின் சிறப்புரைகளும் தாயகத்திலிருந்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமாகிய வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகாவின் அம்பிகையின் போராட்டம் தொடர்பில் தாயக மக்களின் எதிர்பார்ப்பு பற்றிய கருத்தும் கவிதையும் கவிஞர் காசியானந்தனின் வரிகளில் தேனிசை செல்லப்பா பாடிய ‘உலகே உனக்கு கண்ணில்லையா?’ என்ற பாடலை தனபாரதி நேமனின் இசையில் சந்திரமோகன் பிரதியாக்கம் செய்து சிறப்புப்பாடலும் இடம்பெற்றது.

இதனிடையே, அம்பிகையின் போராட்டத்தின் எதிரொலியாக பிரித்தானிய பிரதான அரசியல் கட்சிகளிடையே இடம்பெற்றுள்ள நகர்வுகள் மற்றும் அரசிடமிருந்து கசிந்துள்ள முக்கிய தகவல்கள் தொடர்பில் முன்னாள் தமிழீழ வைப்பக ஆளுகை மேலாளரும் பொருளாதார ஆய்வாளருமான திரு. பாலா மாஸ்டர் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அத்துடன் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இணைய வழியூடாக நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தொடரில் பிரதான அமர்வின் போது அன்னை அம்பிகை செல்வகுமார் வழங்கிய உரை ஒளிபரப்பப்பட்டது.

13 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version