இரு ஏவுகணைகளை ஏவியது வட கொரியா

வட கொரியா பயிற்சி நடவடிக்கையாக இரு ரொக்கெட்களை இன்று திங்கட்கிழமை ஏவியுள்ளது. ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை சோதிப்பதற்கான பயிற்சியாக இந்த ரொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. 

எதிரிகளின் வான் தலங்களை அழித்துவிடக்கூடிய  அணுவாயுத தாக்குதல்களை நடத்தக்கூடிய வலிமை இந்த ரொக்கெட் லோஞ்சருக்கு உள்ளது என வடகொரியா கூறியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாரிய ஏவுகணையொன்றை நேற்றுமுன்தினம் வட கொரியா பயிற்சிக்காக ஏவியிருந்தது.  ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலய கடற்பகுதியில் இந்த ஏவுகணை இறங்கியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இரு நாட்களின் பின்னர், இன்று இரு ரொக்கெட்களை வட கொரியா ஏவியுள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் நேற்று நடத்திய கூட்டு வான்வழி பயிற்சிகளுக்கு பதிலடியாக இந்த ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக வட கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில் ஒரு ரொக்கெட் 390 கிலோமீற்றர் தூரம் சென்றதாகவும், மற்றொரு ரொக்கெட் 340 கிலேமீற்றர் தூரம் சென்றதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இவை ஜப்பானிய கடல் எனும் கிழக்கு கடல் பகுதியில் இறங்கியதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் நடவடிக்கை கடும் ஆத்திரமூட்டல் எனவும்,  கொரிய தீபகற்பத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் எனவும் தென் கொரியா கூறியுள்ளது.

இந்நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஐநா பாதுகாப்புச் சபை நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.