Tamil News
Home செய்திகள் இராணுவத்தினரையும், புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி தேர்தலில் வெல்லமுயலும் ராஜபக்ச அரசு- ரணில்

இராணுவத்தினரையும், புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி தேர்தலில் வெல்லமுயலும் ராஜபக்ச அரசு- ரணில்

வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் இராணுவத்தினரையும், புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்களை விடுத்து அவர்களை அடிபணிய வைத்துப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற அரசு திட்டமிட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக இவ்வாறு பல்வேறு திட்டங்களை அரசு மறைமுகமாகச் செயற்படுத்த முனைகின்றது.

எவரினதும் தலையீடுகளின்றி நீதியான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே இந்த நாட்டிலுள்ள மக்களினதும், எங்களினதும் விருப்பமாகும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு உடன் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டில் என்றுமில்லாதவாறு இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மூலை முடுக்கெல்லாம் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்தில் உள்ளவர்களின் உத்தரவுக்கமைய இந்த நிலைமை உருவாகியுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நாட்டு மக்கள் தமது ஜனநாயகக் கடமையைச் சுதந்திரமாகச் செய்யத் தீர்மானித்துள்ள நிலையில் அவர்களுக்கும், எதிரணிகளின் வேட்பாளர்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கும் வகையில் படையினர் நடந்துகொள்கின்றார்கள்.

இந்த நிலையில், நீதியான தேர்தல் எப்படி நடக்கும்? மக்கள் எப்படி சுதந்திரமாக வாக்களிக்க முடியும்?

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உடன் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version