இராணுவக் கண்காணிப்புடன் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமா? அரியநேத்திரன்

“இம்முறை கொரோனா வைரஸ் தாக்கத்தைக் காரணம் காட்டி சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்காமல் இராணுவத்தினரைக் கண்காணிப்பாளராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” எனக் கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கடந்த தேர்தல்களை போல் இம்முறை சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவழைக்கும்போது அவர்களை 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது என்பது சாத்தியம் இல்லை. இதனைக் காரணம் காட்டி மாற்று நடவடிக்கையாக, எல்லாப் பணிகளிலும் ஈடுபடுத்தும் இராணுவத்தைத் தேர்தல் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்த யாராவது முயற்சிப்பார்கள்.

அப்படி முயற்சிப்பது நல்லதல்ல. அது பக்கசார்பான கண்காணிப்பு பணியாகவே அமையும். தேர்தல் இடம்பெற இன்னும் ஐம்பது நாள்கள் உள்ளன. சர்வதேச கண்காணிப்பாளர்களை ஒருமாத்திற்கு முன்பாகவே வரவழைத்து அவர்களை இலங்கையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி அதன்பின் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதேநல்லது.

இலங்கையில் சுயதீனமான தேர்தலாக எதிர்வரும் பொதுத்தேர்தல் இருந்தாலும் சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைக்காமல் தேர்தல் இடம்பெறுவதாக இருந்தால் நிச்சயமாக அது ஒரு நீதியான தேர்தலாக இடம்பெறும் எனக் கருதமுடியாது. கடந்த போர்கால சூழல்களிலும் பல தேர்தல்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. எல்லாத் தேர்தல்களிலும் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதும், அவர்களின் கண்காணிப்பு இடம்பெற்றபோதும், பல தேர்தல் மோசடிகள் இடம் பெற்றன. வாக்காளர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் இராணுவம் மக்களை தடுத்த பல சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் பல இடங்களில் இடம்பெற்ற வரலாறுகள் எமக்கு உண்டு.

குறிப்பாக 2000, 2002 பொதுத்தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பெருநிலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும் எழுவான்கரை பகுதி இராணுவ, அரசகட்டுப்பாட்டு மகுதியாகவும் இருந்தது. அந்தக் காலத்தில் பட்டிருப்பு பாலத்தையும், வவுணதீவு பாலத்தையும் மூடி படுவான்கரை பெருநிலத்து மக்களை வாக்களிக்காமல் தடுத்த சம்பவங்களும் உண்டு. அப்படி தடுக்கப்பட்டு சந்திரிகா அரசில் ஒருதடவை சோ.கணேசமூர்த்தி வெற்றிபெற்று அமைச்சரான வரலாறுகளும் உண்டு.

இந்தத் தடவை போர் சூழல் இல்லையாயினும் கொரோனா நோய் பீதி இன்னும் குறையவில்லை. இப்படியான சூழலில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறும் பொதுத்தேர்தலில் பல மோசடிகள் இடம் பெற வாய்ப்ப்கள் அதிகம் உண்டு. தற்போதய ஜனாதிபதி எல்லாக் கடமைகளிலும் நிர்வாகத்திலும் இராணுவத்தினரைப் பயன்படுத்துவது போல தேர்தல் கண்காணிப்பிலும் இராணுவத்தைப் பயன்படுத்துமாறு ஆலோசனை கூறவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி இராணுவத்தினரைக் கண்காணிப்பில் ஈடுபடுத்து வதை ஏற்கமுடியாது” எனவும் அவர் மேலும் கூறினார்.