Home ஆய்வுகள் இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை

2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின் மனதை அழுத்திய போதும், இது ஒரு பெரும் தமிழ் இன அழிப்பிற்கான அத்திவாரம் என்று அன்று ஈழத் தமிழர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தாய்லாந்து, நோர்வே, யேர்மன், யப்பான் என ஆறு கட்டம் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும், சமாந்தரமாக ரணில் அவர்களின் தந்திர நகர்வுகள் புலி எதிர்ப்பை சர்வதேச அளவில் விஸ்தரித்திருந்தது.

download 5 இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

 

2005 சனாதிபதித் தேர்தலில் மக்கள் இந்த உழைப்பிற்கான எந்தப் பலனையும் ரணிலுக்கு கொடுக்காமல். மகிந்த ராஜபக்சாக்களை ஆட்சிப் பீடத்தில் ஏற்றினார்கள். இந்த கடும் போக்கு சிங்கள பேரினவாத மகிந்த குடும்பம் வன்னியில் வாழ்ந்த ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் வலை விரித்து துடைத்தழிப்பதற்கான பொறி முறையை வகுத்துக் கொண்டது. இந்த கார்த்திகை மாதம் மாவீரர்களை நினைவு கூரும் எழுச்சியான தருணத்தில் புதிய அரசுத் தலைவராக மகிந்த ஆட்சியில் அமர்ந்தது (13 ஆம் திகதி) ஒரு துரதிஸ்டம் என்றே கூற வேண்டும்.

2006, ஜனவரி 2ஆம் திகதி. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக நோர்வேயின் ஊடாக இலங்கை அரசு அறிவித்தது முதல், இலங்கை இராணுவ இயந்திரம் துரித கதியில் செயற்படத் தொடங்கியது.

யூதர்களை அழித்தொழித்த கிட்லரை நினைவுபடுத்திய ராஜபக்சாக்கள், ஈவிரக்கமற்று போர் வெறி கொண்டு நின்றார்கள். மரபு வழியில் புலிகளின் முன் அரண்களை தாண்ட முடியாத இவர்கள், பல்வேறு தந்திர நகர்வுகளை முன்னெடுத்தார்கள். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கையுடன் கைகோர்த்து, புலி எதிர்ப்பை வெளிப்படுத்தி நின்றமை, ஒரு தெற்காசிய சமநிலைக் குழப்பத்தின் ஆரம்பம் என்பது அப்போது அவர்களுக்கு புரிந்திருக்கவில்லை.

போராடுபவர்களைக் காட்டிலும் போராட்டத்திற்கு உந்து சக்தியாக உறுதியோடு இருக்கும் மக்களின் மீதே இவர்களின் கவனம் அதிகம் சென்றது. உணவு மற்றும் பாதுகாப்பை ஓரளவேனும் பேணிக் கொண்டிருந்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றி, முதலாவது தடைக் கல்லை தந்திரமாக நகர்த்தினார்கள் ஆட்சியா ளர்கள்.

தகுந்த உணவு, குடிநீர், மருந்து, மருத்துவ சிகிச்சை போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் வான் தாக்குதல், கொத்துக் குண்டு, பல்குழல் பீரங்கி, நீண்ட தூர ஏவுகணை  என செறிவான தாக்குதல்களால் மக்களை கிலிகொள்ள வைத்து, வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர வைத்தார்கள்.  மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பாடசாலைகள், மக்கள் நலன் காப்பகங்கள், ப.நோ.கூ சங்கங்கள் என எதனையும் இயங்கவிடாமல், அவற்றிற்கான உணவு மருந்து விநியோகங்களை முற்றிலும் தடை செய்தார்கள். இதனால் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், இளைஞர், யுவதிகள், வயோதிபர்கள் என யாவரும் மிகவும் நலிவடைந்து நோய்வாய்ப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இவ்வாறானவர்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், கோவில்களிலும் தஞ்சமடைந்த போதும், அங்கும் இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால், மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தபடி குடும்பம் குடும்பமாக ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். காயங்கள் பெருந் தொகையில் அதிகரித்துச் செல்ல அதிகளவு மருத்துவமனைகளை செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அரச மருத்துவர்களும், விடுதலைப் புலிகளின் மருத்துவர்களும் இணைந்து துரித கதியில் வெவ்வேறு இடங்களில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து, தம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்ட போதும், மருத்துவமனைகள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறு மருத்துவமனைகளும் பொது இடங்களும் தாக்கப்பட்டு மக்கள் கொல்லப்பட வேறு வழியின்றி கும்பலாக உடைத்துக் கொண்டு இராணுவத்திடம் சரணடைந்து விடுவார்கள்; தொடர்ந்து அங்கு தங்கியிருக்க மாட்டார்கள் என இராணுவமும், அரச அதிகாரிகளும் நினைத்துக் கொண்டதனால், தாக்குதலின் உக்கிரத்தை அதிகரித்தார்களே அன்றி கொஞ்சம்கூட இரக்கம் காட்டவில்லை.

புலிகளின் கோட்டையாக கருதப்பட்ட புதுக்குடியிருப்பை இராணுவத்தினர் நெருங்கும் தறுவாயில், பெப்ரவரி 6ஆம் திகதி அன்று பொது மக்களுக்கும், போராளிகள் குடும்பத்திற்கும் சேவை வழங்கிய பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் படுக்கையில் இருந்த 61 நோயாளர்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்தார்கள். இதில் பல மருத்துவர்களும், தாதிகளும் அதிஸ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தொடர்ந்து அதே மாதம் புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையிலும் எறிகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட இதிலும் 18 நோயாளர்கள் இறந்ததுடன் மேலும் பெருமளவானோர் காயமடைந்தார்கள்.

இவ்வாறான பாதுகாப்பற்ற நிலைமையை தொடர்ந்து, பாதுகாப்பு வலையம் என அரசு அறிவித்த புதுமாத்தளனில் அமைந்திருந்த அரச பாடசாலைக் கட்டிடத்திற்கு புதுக்குடியிருப்பு அரசமருத்துவமனை  நகர்த்தப்பட்டது. அங்கே அரச மருத்துவர்களும், விடுதலைப் புலிகளின் மருத்து வர்களும்,  தமிழீழ சுகாதார சேவையினரின் ஒத்துழைப்புடன் மக்களுக்கான சேவையை தொடர்ந்தார்கள். ஆனாலும் இலங்கை இராணுவத்தினதும், அரச சுகாதார சேவையினரதும் மனிதநேயமற்ற நடவடிக்கைகளினால் எந்தவித மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படாமல் போராடிய சமூகம் தனிமைப்படுத்தப்பட்டு, இனவழிப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலை மருத்துவர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது.

தினம் தினம் மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான உடல்கள் அடுக்கி வைக்கப்பட, குடும்பத்தினர் சூழ்ந்து நின்று கத்தி ஒப்பாரி வைப்பது நாளாந்த நிகழ்வாகியது. வைத்தியசாலையை இராணுவம் கைப்பற்றும் வரை இது நீடித்தது.

ஆனாலும்  மக்கள் இந்தப் போராட்டத்தின் மேல் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையும், மனவுறுதியும் இந்த உலகத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கும் என்றே நம்புகிறேன்.

தீவிர சத்திர சிகிச்சைக்கு குருதி தேவைப்படும் போதெல்லாம், மிகவும் நலிவுற்ற நிலை யிலும் நம்பிக்கை தளராமல் இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லாது தன்னலமின்றி குருதித்தானம் செய்தார்கள். இது சோழ மன்னன் சிபிச் சக்கரவர்த்தி தர்மம் நிலைக்க புறாவின் எடைக்கு சமனாக தன் சதையை வெட்டிக் கொடுத்த வரலாற்றை நினைவுபடுத்தியது.

இலட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் பகிர்ந்தளிப்பதற்காக அனுப்பப்பட்ட வெறும் ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான Anchor பால் பைக்கற்றுகள். குருதிக்கொடை தந்தவர்களுக்கே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் அறம் தவறாமல் செயற்பட்ட மருத்துவர்களின் மனநிலை போராட்டத்தின் பால் அவர்கள் கொண்ட பற்றையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நின்றன. அத்துடன் அரச இயந்திரத்துடன் தொடர்ச்சியாக தொடர்புகளை ஏற்படுத்தி, மக்களை பாதுகாப்பதிலும், காயமடைந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதிலும், மருந்துகளை கோரிப் பெற்றுக் கொள்வதிலும் அதீத முனைப்புக் காட்டிய போதிலும், உரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை.

அன்று ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 19ஆம் திகதி. வார இறுதி நாளாக இருந்தபோதும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவார்கள். உரிய அம்புலன்ஸ் வண்டி கிடையாது காயங்கள் மிகமோசமாக இருந்தாலும் ஈருருளிகளே இவர்களைக் காவிக்கொண்டு பலகொலைக் களங்களைத் தாண்டி வரவேண்டி இருக்கும்.

அன்று எனது பகல் கடமைகளை முடித்து விட்டு வைத்தியசாலைக்கு பின்புறம் இரண்டாவது தெருவில் இருந்த மனைவி பிள்ளைகள் தங்கியிருந்த மூடிய பதுங்கு குழியுடன் கூடிய தற்காலிக கூடாரத்தை அடைந்தேன். அன்று இரவு வழமைக்கு மாறாக வைத்தியசாலைச் சுற்றாடலிலேயே தாக்குதல்கள் மிகவும் உக்கிரமடைந்து காணப்பட்டன. இரவு முழுவதும் தூங்க முடியாமல் அகோரத் தாக்குதல்கள். அதிகாலையில் வைத்தியசாலை வளாகம்  இராணுவ வசமானதை உணர்ந்து கொள்ள முடிந்தது. காலையில் வெளியே தலை நீட்டிய போது பெரும்பாலான கூடாரங்கள் வெறுமையாக காணப்பட்டன. அண்ணளவாக 50,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வேறு வழியின்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வலிந்து சென்று சரணடைந்தார்கள். பலர் இடை நடுவிலேயே கொல்லப்பட்டார்கள்.

நானும் மனைவி, குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறி கடற்கரை நோக்கிய பாதை வழியாக நடந்தோம். ஒரு பெண் தலைவிரி கோலமாக நின்றபடி காயமடைந்த தன் கணவன் பிள்ளைகள் எல்லோரையும் உழவு இயந்திரத்தில் ஏற்றி விட்டு, யாராவது அந்த உழவு இயந்திர வண்டியை வைத்தியசாலைக்கு ஓட்டிச்சென்று எனது குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று இரந்து கேட்டு கதறி அழுதார். மோசமான துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியில் அவர்களை கடந்து செல்லும் போது என் இதயம் தகர்ந்து நொருங்கியது. வைத்தியசாலையை இராணுவம் கைப்பற்றி இருப்பதை எப்படி அவளுக்கு தெரியப்படுத்துவது; அல்லது தெரிந்துதான் கேட்கிறாளா? என்று கூட உணர முடியவில்லை. என் குழந்தைகள் வேறு பயந்து கதறுவதை தாங்கிக் கொள்ள முடியாத இக் கட்டான நிலை. மனதை திடப்படுத்திக் கொண்டு அவர்களை கடந்து சென்றேன். எத்தனையோ கோரமான சம்பவங்களை கடந்து சிகிச்சை வழங்கிய போதும் இது என்னை மிகவும் பாதித்த சம்பவமாக என் மனதில் ஆழப்பதிந்து கொண்டது.

இவ்வாறு மருத்துவமனைகள் கொலைக் கூடங்களாக மாற்றப்பட்ட கொலை வெறி, 21ஆம் நூற்றாண்டின் மிகமோசமான மனிதநேயமற்ற நிலைமையினையே இங்கு வெளிப்படுத்தியது.  இதன் சூத்திரதாரிகள் ராஜபக்சாக்கள் மட்டுமல்ல, அவர்களின் வல்லமைக்கு அப்பால் அவர்களுக்கு உதவிய நாடுகளும் தான் என்பது வெளிப்படையான உண்மை.

இவ்வாறு தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இது  மே 18ஆம் திகதி வரையும் நீடித்தது என்பதற்கு இலட்சக் கணக்கானோர் சாட்சியம். இதற்கு அப் பால் நவீன தொழில் நுட்ப உச்சமும் சாட்சி என்பதனை யாரும் மறுக்க முடியாது.

எனினும், இந்த உண்மைகளை அம்பலப்படுத்தி,   சர்வதேச மட்டத்தில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தி, நியாயம் தேடிக்கொள்ள தயங்கும் சக்திகள் யாருக்கு துணை போகின்றார்கள் என்ற கேள்வி எப்போதும் என்னுள் எழாமல் இல்லை.

 

Exit mobile version