Tamil News
Home செய்திகள் இயக்கச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ; காயமடைந்த முன்னாள் போராளி குடும்பத்தினருடன் கைது

இயக்கச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ; காயமடைந்த முன்னாள் போராளி குடும்பத்தினருடன் கைது

இயக்கச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் பொலிஸார், இச்சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போராளியையும் அவரது மனைவியான ஆசிரியையும், அவர்களுடைய வீட்டிலிருந்த மேலும் மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் மாலை வெடிப்புச் சம்வம் இடம்பெற்றது. இதன்போது வீட்டிலிருந்த குடும்பத் தலைவரான தங்கராசா தேவதாசன் (வயது – 43) கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிகாயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பில், காயமடைந்தவரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், கணவன் பெற்றோலைப் போத்தலில் நிரப்பி வைத்திருந்தார் என்றும், விளக்குக்கு அருகில் கொண்டு சென்றபோது அது வெடித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், இராணுவத்தினர் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள் வெடித்தாலேயே அவர் காயமடைந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கிருந்து 2 உள்ளூர் தயாரிப்பு குண்டுகளும் மீட்கப்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிபொருள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, தவறுதலாக வெடித்தது தெரியவந்தது. மின் ரின்னுக்குள், சி – 4 வெடி மருந்தை வைத்து குண்டு தயாரிக்க முயன்றுள்ளார். அவர் வெடிகுண்டு தயாரித்தது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனக் காயமடைந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்து மடிக்கணினி, 2 உள்ளூர் தயாரிப்பு குண்டுகள், பற்றரி, வயர், கமரா, குழாய் என்பன மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர் பாவித்த, அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய தொலைபேசி அயல் காணிக்குள் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த 3 பெண்களும் விசாரணைக்காக பளை பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவரின் மனைவி பயங்கரவாதத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் 1994ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட நிலையில், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். புனர்வாழ்வின் பின்னர் 2012 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version