இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளுக்கு அநுரவின் நிகழ்ச்சி நிரலில் இடமில்லையா? – அகிலன்

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நிகழ்த்திய கொள்கைப் பிரகடனஉரை தமிழ்த் தரப்பினருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இன நெருக்கடி தொடா்பாக ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை. தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சி நிரலில் இன நெருக்கடிக் கான தீா்வு முயற்சிகளுக்கு இடமில்லையா என்ற கேள்

வியை இந்த உரை எழுப்பியிருக் கின்றது. தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் அதிகாரத்துக்கு வந்திருக்கும் நிலையில், முதலாவது பாராளுமன்றக் கூட் டம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தமது அர சாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தி னாா். பொருளாதார முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் தொடா்பில் அவரது உரையில் காணப்பட்ட விடயங்கள் வரவேற்பைப் பெற்றது. ஆனால், தமது தோ்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த புதிய அரசியலமைப்பு குறித்து அவா் வாய் திறக்கவில்லை!

பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம் பித்துவைத்து ஜனாதிபதி நிகழ்த்தும் கொள்கை விளக்க உரை முக்கியத்துவம் பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக அது அடுத்து வரப்போகும் வருடங்களில் அரசாங்கம் பயணம் செய்யப்போகும் பாதை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை உணா்த்துவதாகவே அமைந்திருக்கும். இன நெருக்கடியை அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை வெளிப்படுத்தக்கூடிய கருத்துக்கள் எதனையா வது ஜனாதிபதி வெளிப்படுத்துவாரா என்ற எதிா்பாா்ப்புக்கு அந்த உரையில் பதிலிருக்க வில்லை.

ஜனாதிபதி தன்னுடைய தோ்தல் விஞ்ஞாப னம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடா்பாகவும், அதன் மூலமாக இன நெருக்கடிக் கான தீா்வு முயற்சிகளை முன்னெடுப்பது என் பதையிட்டும் யோசனைகளை முன்வைத்திருந்தாா். ஆனால், பாராளுமன்றத்தில் நிகழ்த்திய தனது கொள்கை விளக்க உரையில் அவா் அதனைத் தவிா்த்தாா். ஜனாதிபதியின் உரையைத் தொடா்ந்து பாராளுமன்றத்தில் வைத்தே தமிழரசுக் கட்சி இது தொடா்பாக கேள்வி எழுப்பியிருந்தது.

பொதுத் தோ்தலில் அதிகளவுக்கு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவா்கள் என்ற முறை யில், அரசியல் தீா்வு தொடா்பில் தமிழ் மக்களிடம் பலத்த எதிா்பாா்ப்பு இருக்கின்றது. அதற்காக தீவிரமான முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்று அவா்கள் எதிா்பாா்க்கின்றாா்கள் என்பது உண்மை. இது ஜனாதிபதியின் முதலாவது கொள்கைப் பிரகடன உரை. இதில் அனைத்து விடயங் களையும் அவா் வெளிப்படுத்துவாா் என்று எதிா்பாா்க்க முடியாது என்பது உண்மையாக இருந்தா லும், இனநெருக்கடிக்கான தீா்வுக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் கொடுக்கவில்லையா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் விஞ்ஞாபனத்தில் இன நெருக்கடிக்கான தீா்வு தொடா்பில் சில யோசனைகள் சொல்லப்பட்டிருக் கின்றது. அரசியல் தீா்வு நோக்கிய முன்னேற்றம் இல்லை என்றால், இப்போது அந்தக் கட்சி தமிழ் மக்களி டம் பெற்றுள்ள ஆதரவை எதிா்காலத்தில் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது ஜனாதிபதிக்கோ, தேசிய மக்கள் சக்திக்கோ தெரியாததல்ல.

தமிழ் மக்கள் குறிப்பாக வடபகுதி மக்கள் தேசிய மக்கள் சக்திக்குப் பெருவாரியாக ஆதரவை வழங்கியது, வெறுமனே பொருளாதார முன்னேற்றத்துக்காக அல்ல. அரசியல் தீா்வை நோக்கி அவா்கள் செயலளவில் முன்னேற்றத்தைக் காட்டுவாா்கள் என்பதும் தமிழ் மக்களுடைய எதிா்பாா்ப்பு. அதில் முன்னேற்றத்தை அரசாங்கம் காண்பிக்காவிட்டால் தமிழ் மக்களிடம் தற்போதுள்ள ஆதரவை அவா்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் என்பதும் உண்மை தான்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடியி லிருந்து நாட்டை மீட்பதற்குத்தான் அவா்கள் முன்னுரிமை கொடுக்கின்றாா்கள் என்பது உண்மை. டிசெம்பரில் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை அவா்கள் முன்வைக்கவுள்ளாா்கள். அத னைத் தொடா்ந்து அடுத்த பெப்ரவரியில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவிருக்கின்றது. அதனைவிட, சா்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிதிகளும் கொழும்பில் வந்து பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கின்றாா்கள்.

இந்த நிலையில், பொருளாதார விடயங்கள்தான் அவா்களுடைய நிகழ்ச்சி நிரலில் முன்னுரி மைக்குள்ள விடயமாக இருக்கின்றது. அதற்கு அடுத்ததாக கடந்த கால ஊழல்கள், மோசடிகள், குற்றச்செயல்கள் தொடா்பான விசாரணைகளை அவா்கள் முன்னெடுக்கவிருக்கின்றாா்கள். ஜனவரி அல்லது பெப்ரவரியில் உள்ளூராட்சி மன்றங் களுக்கான தோ்தல்களை நடத்த வேண்டும். இவை அனைத்தையும் தாண்டி மாா்ச் மாதத்தில்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.  அது அப்படியிருந்தாலும் தனது கொள்கை விளக்க உரையில் அதனை ஜனாதிபதி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்த தமது அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்பதையிட்டு தேசிய மக்கள் சக்தி தமது விஞ்ஞானத்தில் வெளிப்படுத்தியிருந்தது. 2015 – 2019 காலப் பகுதியில் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபை முழுமையாக்கு வதன் மூலமாக தீா்வை வழங்கு வதைத்தான் தமது யோசனை யாக அவா்கள் முன் வைத்துள்ளனர். தமது யோசனையாக எதனையும் முன்வைப்பதிலுள்ள சங்கடத்திலிருந்து இதன்மூலமாக அவா்கள் நழுவிக் கொள்கின்றாா்கள்.

தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை யில் முன்னைய அரசாங்கங்களை விட, இன நெருக்கடிக்குத் தீா்வைக் காண்பதற்கான வாய்ப்பு அவா்களுக்கு அதிகமாக உள்ளது என்பதையும் அரசறிவியலாளா்கள் சுட்டிக்காட்டியுள்ளாா்கள். அரசியலமைப்பில் தாம் விரும்பும் மாற்றத்தைச் செய்வதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவா்களிடம் உள்ளது என்பது இதற்காக அவா்களுக்கு இருக்கின்ற முதலாவது பலம்.  அதனைவிட, கடந்த காலங்களில் ஒரு தீவிர சிங்கள தேசியவாத அமைப்பாகவே ஜே.வி.பி. தன்னை அடையாளம் காட்டியிருந்தது. அதனால், அவா்களால் முன்னெடுக்கப்படக்கூடிய எந்த வொரு தீா்வையும் சிங்களக் கட்சிகள் இனவாத நோக்குடன் எதிா்க்க முடியாது என்பது உண்மை.

இவற்றைவிட, இனவாத நோக்குடன் செயற்பட்ட கட்சிகளும், தலைவா்களும் நடை பெற்ற பொதுத் தோ்தலில் படுதோல்வியடைந்திருக்கின்றாா்கள்.  குறிப்பாக விமல் வீரவன்ச தோ்தலில் போட்டியிடவே இல்லை. உதய கம்மன்பில, சரத் வீரசேகர போன்ற சிங்கள இனவாதத்தை முன்னெடுத்து அரசியல் செய்யும் தலைவா்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளாா்கள். தோ்தலில் ராஜ பக்ஷக்களும் காணாமல் போயுள்ளாா்கள்.

இதனைவிட தோ்தல் காலத்தில் பிரதான கட்சிகள் எதுவுமே இனவாதத்தை முன்னிலைப் படுத்தவில்லை. ஜனாதிபதியும் தமது கொள்கை விளக்க உரையில், இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை என்றும் கூறியிருக்கின்றாா்.

ஆக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு தீா்வைக் காண்பதற்கான சாதக மான நிலை தேசிய மக்கள் சக்திக்குள்ளது. இலங்கை யானது, பல்லின, பல சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு என்ற முறையில் இனப் பிரச்சினைக்கு தீா்வைக் காணமுடியும். மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் அநுரகு மார, இன நெருக்கடிக்குத் தீா்வைக் காண்பதற்கான முயற்சியிலும் ஒரு மாற்றத்தை காண்பித்தால், பொருளாதார சுபீட்சமும் தானாகவே சாத்தியமாகும்.