Tamil News
Home செய்திகள் இனவாதமும் இராணுவ மயமாக்கலும் ஒன்றாக இடம்பெறுகின்றது – கஜேந்திரகுமார்

இனவாதமும் இராணுவ மயமாக்கலும் ஒன்றாக இடம்பெறுகின்றது – கஜேந்திரகுமார்

“வடக்கு கிழக்கு கடந்த 40வருடங்களாக இராணுவ மயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெற்கில் நடைபெற்றுவரும் இராணுவ மயமாக்கலை நாம் புறக்கணிக்க முடியாது. இனவாதமும் இராணுவ மயமாக்கலும் ஒருங்கு சேர கடைப்பிடிக்கப்படுமாயின் என்ன நடைபெறும் என்பதனை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கஜேந்திரகுமார் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பிலும், இதுதொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தொடர்பாகவும், அவ்வாணைக்குழு விசாரணைகளை நடத்திய முறை தொடர்பாகவும் இங்கு உரையாற்றியவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். ஆனால் பலரும் இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பின்னரும், அதற்கு முன்னரும்கூட இந்நாட்டில் உருவாகிவரும் கலாச்சாரம் பற்றி பேசவில்லை. நாம் இவ்வாறான பின்னணியை ஆராயத் தவறுவோமானால் இவ்வறிக்கையானது நம்பகத்தன்மையுடையாதாக இருந்தாற்கூட அர்த்தமற்ற ஒன்றாக அமைந்துவிடும்.

அரசிற்கும் விடுதலைப்புலிகளும் இடையிலானஆயுதப் போராட்டகாலத்தில் முஸ்லீம் சமூகம் பாதுக்காப்புத் துறைக்கு, குறிப்பாக புலனாய்வுப் பணிகளுஎனக்கு உதவிவந்ததாக எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கூறினார். அது சரியானது. அது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களின் அரசியற் தலைமை அநேகமான சந்தரப்பங்களில் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்தது. தமிழ் மக்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது தெரிந்துகொண்டும் தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லீம்கள் இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்டதையிட்டு தமிழ்மக்கள் விசனமடைந்திருந்தனர். முஸ்லீம்களின் இச்செயல் தமிழ்மக்களை ஆத்திரப்படுத்தியது. அந்தளவிற்கு முஸ்லிம் மக்களின் அரசியற் தலைமை இலங்கை அரசிற்கு விசுவாசமாக நடந்துகொண்டது. அதேபோன்ற விசுவாசத்துடன் முஸலீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பணியாற்றினார்கள்.

ஆனால் போர்முடிவுக் கொண்டு வரப்பட்டபின்னர் தமிழ் மக்களைக் காட்டிலும் முஸ்லிம் மக்கள் மீதே குறிவைக்கப்படுவதுடன், அவர்கள் இனப்பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இஸ்லாம் மதத்துக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஒருவரும் மறுக்கமுடியாது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்புக் கலாச்சாரம் முஸ்லீம் சமூகத்தினரை தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதற்கு வழிவகுத்தது. ஏனெனில் அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதுகிறார்கள். இதுதான் உண்மை நிலவரம்.

அரசுக்கு விசுவாசமாகவிருந்த ஒரு சமூகத்தை குறிவைத்து, பாசிசத்திற்கு ஒப்பான கருத்துகளை வெளியிடும்போது, அவர்களை வேண்டத்தகாதவர்களாக நடத்தும்போது, அச்சமூகம் தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதனைத் தடுக்கமுடியாது. எனது மனதில்படுகிறபடி சொல்வதானால் இந்த நாடு சரிவை நோக்கிச் செல்கிறது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. சிங்கள பௌத்த தேசியவாதம் காரணமாக இந்நாடு சரிவை நோக்கிச் செல்லவில்லை. சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பயன்படுத்தி இனவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இவ்வினவாதமானது திட்டமிட்டு சிங்களபௌத்தர்கள் அல்லாதவர்களை குறிவைத்துச் செயற்படுத்தப்படுகிறது.

உங்களுடைய அடையாளங்களைப் பேணுவதற்காகச் செய்யும் காரியங்களைச் செய்யுங்கள். சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டில் மட்டுமே இருக்கிறார்கள் என்பதனை நாம் அறிவோம். நீங்கள் அவர்களது அடையாளத்தினைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்வதானால் செய்யுங்கள். ஆனால் இந்த நாடு தனித்து சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற அடிப்படையில் செயற்படுவீர்களேயானால் மற்றைய சமூகத்தினர் தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதனைத் தடுக்கமுடியாது. இந்நாடு இனவாத நாடாக மாறிவருகிறது என்று சொல்வதில் எனக்கு எதுவித தயக்கமுமில்லை. முஸ்லீம் சமூகத்தினர் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறை அதற்குச் சாட்சியமாக அமைகிறது.

வடக்கு கிழக்கு கடந்த 40வருடங்களாக இராணுவ மயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெற்கில் நடைபெற்றுவரும் இராணுவ மயமாக்கலை நாம் புறக்கணிக்க முடியாது. இனவாதமும் இராணுவ மயமாக்கலும் ஒருங்கு சேர கடைப்பிடிக்கப்படுமாயின் என்ன நடைபெறும் என்பதனை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள். இன்று இராணுவத்தினர் சிவில் நிர்வாகம் உட்பட அநேகமாக எல்லா விடயத்திலும் தலையிடலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இவைதான் பாசிசத்தின் அத்திவாரக் கற்கள். இந்நிலையானது பாசிசித்தை நோக்கி இந்நாடு சென்று கொண்டிருப்பதனை குறிகாட்டுவதாக அமைந்துள்ளது என்பதனை இச்சபையிலுள்ள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கிறேன்.

Exit mobile version