இனவழிப்புக்கான நீதிதேடலை அடுத்த தலைமுறைக்கு பாரப்படுத்தப் போகிறோமா?

பதினொரு ஆண்டுகள் நிறைவெய்திய நிலையில், உலகால் தீர்க்கப்பட முடியாத தலைமுறைப் பிரச்சினையாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்காப் படைகள் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்துச் செய்த இனஅழிப்புக்கான நீதியையோ அல்லது இந்த இனஅழிப்பால் பாதிப்புற்றவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வையோ, பெற இயலாத நிலையில் உலகம் கடந்த பதினொரு ஆண்டுகளாக உள்ளது.

தெளிவாகச் சொன்னால் முள்ளிவாய்க்கலில் ஈழத்தமிழர் சிறிலங்காவால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு தலைமுறை நிறைவுபெற்று அடுத்த தலைமுறை தோன்றி விட்ட நிலையிலும்,உலக நாடுகளாலோ,உலக அமைப்புக்களாலோ, பாதிப்புற்றவர்களுக்குச் சட்ட ஆட்சியின் மூலமோ ஜனநாயகத்தின் வழியிலோ நீதியை கிடைக்கச் செய்து அவர்களுக்கு புனர்வாழ்வளித்து தீர்வு காண இயலாத உலகப் பிரச்சினையாகத் தொடர்கிறது.

இந்த உண்மையை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக உலகெங்கும் முக்கிய நாடுகளின் குடிமக்களாக உள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தமது பலத்தையும் வளத்தையும் ஆற்றல்களையும் ஒன்று திரட்டி ஓரணியில் நின்று இந்த முக்கியமான பிரச்சினைக்கு உலகின் மூலம் தீர்வு காணவைக்க வேண்டிய தங்கள் பொறுப்பிலும் அலட்சியமாகவே நடந்து கொள்கின்றனர் என்பதே பதினொரு ஆண்டுகால வரலாற்றுப் பதிவாக உள்ளது.

எனவே புலம்பெயர் தமிழர்கள் தங்களிடை உள்ள மாறுபாடுகளை மதித்து இந்த விடயத்தில் பொதுவேலைத்திட்டமொன்றில் ஒன்றுபட்டு நின்று செயலாற்ற வேண்டிய ஆண்டாக தொடரவுள்ள பன்னிரண்டாவது ஆண்டு அமையட்டும்.

மேலும், சிறிலங்கா அரசாங்கத்தின் பதினொரு ஆண்டுகால நிலைப்பாடானது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொள்கிற ஒரு ஆட்சியாளர், பாராளுமன்றத்தின் ஆட்சிக்குட்டபட்ட நிலப்பரப்பில் தாம் நினைத்தமாதிரி இனஅழிப்புக்களையும்,மனிதாயத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும், இனஅழிப்புச் செயல்களையும் செய்து விட்டு, அது தங்களுடைய இறைமை தரு உரிமை என அந்தக் குற்றச்செயல்களை நியாயப்படுத்தி, எந்த நாடுகளுடன் நடைமுறையில் அவர்களின் சந்தை நலன்களுக்கும் இராணுவத் தேவைகளுக்கும் தனது இறைமையைப் பகிர்ந்து உறவாடுகிறதோ,அந்த நாடுகளின் துணையுடன்,அனைத்துலகச் சட்டங்களுக்கும் அனைத்துலக அமைப்புக்களுக்கும் ஈடுகொடுத்து வாழலாம் என்னும், உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தோற்றுவித்துள்ளது.

இது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எத்தகைய மோசமான நிலைகளைத் தோற்றுவிக்கும் என்பதை உலகின் மனிதஉரிமை அமைப்புக்களையும் உலக அமைதிக்கான அமைப்புக்களையும்; செயற்பாட்டாளர்களையும் சிந்திக்க வைக்க வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கே உள்ளது.

இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஆங்கிலேய காலனித்துவக் காலம் வரை இறைமையோடும் தன்னாட்சியோடும் தனியான தேசியத்தன்மையுடனான ஆட்சிப்பரப்புக்களைக் கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களின், இறைமையையும் தன்னாட்சியையும், இலங்கைத்தீவில் பிரித்தானிய காலனித்துவ அரசால் ஒற்றையாட்சித்தன்மையையும் தாங்கள் பெரும்பான்மையினர் என்ற எண் விளையாட்டு அரசியலையும் பெற்றுக்கொண்ட சிங்கள பௌத்த பேரினவாதம், இனஅழிப்பின் மூலம் தனதாக்கத் தொடங்கிய திட்டமிட்ட செயற்பாடுகளின் உச்சமாகவே முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு வரலாறாகியது.

எனவே முள்ளிவாய்க்கால் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை அல்ல அனைத்துலகப் பிரச்சினை என்பதை உலகநாடுகளுக்கு உணர்த்தி, பாதிப்புற்று எல்லைப் படுத்தப்பட்டுள்ள மக்களாக,அதீத மனிதாய தேவைகளில் ஒரு தலைமுறையைக் கடந்து வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு,சிறிலங்காவின் இறைமையை மீறி மனிதாய தேவைகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கான அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாக நேரடியாக மனிதாய உதவிகளை வழங்கி,அவர்களின் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் காப்பாற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்த வேண்டியவர்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் பிரச்சினை அனைத்துலக மனித உரிமைக்கவுன்சிலாலும் அனைத்துலக நீதிமன்றத்தாலும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதற்கான போதிய சான்றாதாரங்கள் உள்ளன.

இவற்றின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவும் மனித உரிமைகள் மற்றும் உலக அமைதி என்பவற்றுக்காகப் பாடுபடும் அனைத்துலகச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இரண்டாவது தலைமுறைக்கு உலகின் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாகப் பாரப்படுத்தப்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் பெற முயற்சிக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் இனத்துவக்கடமையாக உள்ளது.