இனப்படுகொலை இடம்பெறவில்லை என கூறி பேரினவாதிகள், உலகத்தின் கண்களை மறைக்க முயற்சி: சிறீதரன் சாடல்

ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காலங்காலமாக எங்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் கறைபடிந்த வரலாற்றின் நாளான குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தலில், வலிசுமந்த நெடுந்தீவு மண்ணிலிருந்து, கனேடியப் பிரதமருக்கும் பிரம்டன் நகர மேயருக்கும் நன்றிகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்துக்கொத்தாக எங்களை கொன்றொழித்துவிட்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறவே இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், நாமல் ராஜபக்சவும், அலி சப்ரியும் தெரிவித்துள்ள கருத்துகள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கத்தக்க, சிங்கள வல்லாதிக்க வெளிப்பாட்டுக்குரியவையாகும்.
அத்தகைய கருத்துகளை முன்வைத்தோர்க்கு எதிராக வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய இனவாதம் கொப்பளிக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான சர்வதேச சாட்சியமாக, பிரம்டனில் இனப்படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தாம் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.