இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொண்ட ஒன்ராறியோ நாடாளுமன்றம்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கை இனஅழிப்பு என்பதை கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (6) கனடாவின் பெரிய மாநிலமான ஒன்ராறியோ மாநிலத்தின் நாடாளுமன்றத்தில் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு என்பது தொடர்பில் மூன்றாம் கட்ட வாசிப்பு இடம்பெற்றது. வாசிப்பினை தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் அனைத்துக் கட்சிகளும் வாக்களித்து அதனை தமிழர் இன அழிப்பு அறிவூட்டல் வாரமாக அங்கீகரித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தினால் 2019 ஆம் ஆண்டு தனிநபர் சட்ட மூலமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்ட மூலம், முதல் இரண்டு வாக்கெடுப்புக்களின் பின்னர் நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராணியின் உத்தியோக பூர்வ கையொப்பத்தின் பின்னர் இது சட்டவரைபில் இணைக்கப்படுவதுடன், மே 18 ஆம் நாளை பிரதானமாகக் கொண்ட 7 நாட்கள் ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கொள்ளப்படும்.

கனடாவில் இடம்பெற்ற இந்த நகர்வு ஏனைய நாடுகளிலும் அதனை கொண்டு வருவதற்கு முன்னோடியாக இருக்கும் என்பதுடன், இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.